ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி சுவை உண்டு. அந்த வகையில் திருநெல்வேலி என்றாலே சொதி குழம்பு தான் ஃபேமஸ். இந்த மாப்பிள்ளை சொதி குழம்பு நம் வீட்டில் எளிமையான முறையில் செய்து மகிழலாம் வாங்க. திருநெல்வேலி ஸ்பெஷல் மாப்பிள்ளை சொதி குழம்பு ரெசிபி இதோ!
இந்த குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கப் பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேங்காயை நன்கு துருவி மூன்று முறை பால் எடுத்து தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சொதி குழம்பு செய்வதற்கு கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, பட்டர் பீன்ஸ், பீன்ஸ், முருங்கைக்காய், அவரைக்காய், சௌசௌ என காய்கறிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொரிந்ததும் 10 சின்ன வெங்காயம், 10 பல் வெள்ளைப்பூண்டு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய் சிறிய துண்டு இஞ்சி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது சொதி குழம்பு தேவையான காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் நாம் மூன்றாவது முறையாக பால் எடுத்த தனியான தேங்காய் பால் இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
காய்கறிகள் பாதி அளவு வெந்து வரும்போது அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, நாம் வேகவைத்து வைத்திருக்கும் ஒரு கப் பாசிப்பருப்பு, இரண்டாவது முறை பால் எடுத்த தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பேமஸ் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் பட்டர் தந்தூரி சிக்கன்! அசத்தலான ரெசிபி இதோ…
குழம்பு ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதித்ததும் முதல் முறை பால் எடுத்த கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு இப்பொழுது தயார். அடுப்பை அணைத்துவிட்டு அரை எலுமிச்சை பழம் பிழிந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலைகள் தூவினால் திருநெல்வேலி ஸ்பெஷல் மாப்பிள்ளை சொதி குழம்பு தயார்.
இந்த சொதி குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்திற்கும் மிகச் சிறப்பாக இருக்கும். அதிகமாக தேங்காய் பால் வைத்து சமைப்பதால் வயிற்று புண் , குடல் புண் அவற்றிற்கு சிறந்த அருமருந்தாக அமையும்.