குழந்தைகளுக்கு மீண்டும் பள்ளி ஆரம்பித்த நிலையில் புதுவிதமான ரெசிபிகள் தினமும் செய்ய வேண்டியது தாய்மார்களின் கடமையாகும். பள்ளிகளுக்கு கொடுத்து விடும் லஞ்ச் பாக்ஸ் சுவையானதாக மட்டும் அல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளை திருப்திப்படுத்தும் வகையில் புதுவிதமாக மும்பை ஸ்டைல் தவா புலாவ் ட்ரை பண்ணலாம் வாங்க…..
இந்த ரெசிபி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஒரு ஆறு காய்ந்த வத்தலை தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அதன் பின் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதில் ஒன்றரை தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். அதை தொடர்ந்து அதில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வறுத்து முட்டை பொடிமாஸ் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது தயார் செய்த முட்டை பொடிமாஸ் தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக அதே கடாயில் மீண்டும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் ஒன்று, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி பழம் ஒன்று சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் மற்றும் தக்காளி கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதுமானது.. அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதில் மீதியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கடாயில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் வற்றி மசாலா கெட்டியாக மாறியதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து கலந்து கொள்ளலாம்.
ஒரு கப் பச்சரிசி போதும்…. மிருதுவான கேக் வீட்டிலேயே செய்யலாம்! ரெசிபி இதோ….
இந்த புலாவ் செய்வதற்கு நாம் வீட்டில் இயல்பாக பயன்படுத்தும் அரிசியை பயன்படுத்தினால் போதுமானது. உதிரியாக சாதத்தை வடித்து நன்கு ஆற வைத்திருக்க வேண்டும். இந்த சாதத்தை நம் கடாயில் தயார் செய்து வைத்திருக்கும் தொக்குடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
இந்த நேரத்தில் முதலில் நாம் வறுத்து வைத்திருக்கும் முட்டை பொடிமாசையும் கடாயில் சேர்த்து சாதத்துடன் நன்கு கலந்து கொள்ளலாம். இறுதியாக பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு, கைப்பிடி அளவு கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால் சுவையான மும்பை ஸ்டைல் தவா புலாவ் தயார். காரசாரமாக சாப்பிட விரும்பும் குழந்தைகளுக்கு இந்த புலாவ் மிகக் கட்சிதமான பொருத்தமாக இருக்கும்.