அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணி, சிக்கன் வறுவல், பெப்பர் சிக்கன், செட்டிநாட்டு சிக்கன் என சிக்கனில் எத்தனை வகைகள் செய்தாலும் அலுக்காமல் சாப்பிடும் பலரை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட சிக்கன் பிரியர்களுக்கான ஒரு அட்டகாசமான ரெசிபி தான் கிரீன் சிக்கன். இதற்கு தக்காளி எதுவும் தேவையில்லை. தக்காளி விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் இது போன்ற சிக்கன் செய்து ருசித்து மகிழலாம். வாருங்கள் கிரீன் சிக்கன் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கிரீன் சிக்கன் செய்வதற்கு முக்கால் கிலோ அளவு சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நான்கு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் இரண்டு பிரியாணி இலை, இரண்டு துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், 2 கிராம்பு, ஒரு அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அட… நாட்டுக்கோழி வைத்து சுவையான ஈரோடு ஸ்பெஷல் சிந்தாமணி சிக்கன்…!
வெங்காயம் ஓரளவு வதங்கும் பொழுதே அதனுடன் இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக் கரண்டி சேர்த்து அதையும் பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாய்களை கீறி சேர்த்து அதையும் வதக்கவும். பிறகு நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கி விட வேண்டும்.
இந்த நிலையில் அரை டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற விட வேண்டும். சிக்கன் மசாலாக்களுடன் சேர்ந்து நன்கு வேகும் நேரத்தில் இதற்கான மற்றொரு மசாலாவை தயார் செய்யலாம்.
சுவையான சிக்கன் பிரியாணி குழையாமல் பிரஷர் குக்கரில் இப்படி செய்து பாருங்கள்…!
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு புதினா, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி, 10 நிமிடங்கள் ஊறவைத்த ஏழு முந்திரிப் பருப்பு, நான்கு டேபிள் ஸ்பூன் தயிர், 4 பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். திப்பிகள் ஏதும் இல்லாமல் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது நாம் அரைத்த மசாலாவை ஏற்கனவே வெந்து கொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கிளறி கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு வற்றி வரும் வரை இதனை கிளறி விடவும். சிக்கன் நன்கு வெந்து வந்தவுடன் இறுதியாக அரை டீஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் அளவிற்கு கசூரி மேத்தியை தேய்த்து தூவி விடவும். அவ்வளவுதான் அட்டகாசமான கிரீன் சிக்கன் தயார்.