புத்தாண்டு முன்னிட்டு 90ஸ் குழந்தைகளின் மிக விருப்பமான இனிப்பு கலகல! ரெசிபி இதோ…

டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் கிடைக்கும் இந்த கலகல இனிப்பு முந்தைய தலைமுறையின் விருப்பமான ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றாகும். சாப்பிடுவதற்கு மிதமான இனிப்பில் நல்ல முறுமுறு என இருக்கும் இந்த கலகல எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. மேலும் இந்த இனிப்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் வீட்டில் செய்வதும் வழக்கமான ஒன்று. இந்த முறை இந்த ஸ்வீட் நம் வீட்டில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ரவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் ஊறவைத்த ரவை அடுத்ததாக சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரின் கால் கப் சக்கரை இரண்டு ஏலக்காய் சேர்த்து மையாக அரைத்து மைதாவுடன் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் கால் தேக்கரண்டி பேக்கிங் பவுடர், கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

அடுத்ததாக இதில் கால் கப் வெண்ணையை உருக்கி சூடுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து மாவு பிசைவதற்கு தண்ணீர் சேர்க்காமல் தேவையான அளவு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவு கெட்டியான சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல திரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மெல்லியதாக திரட்டாமல் சற்று தடிமனாக திரட்டி எடுத்துக் கொள்ளலாம்.

பழைய சாதம் வைத்து பத்து நிமிடத்தில் கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி!

இப்பொழுது வட்ட வடிவில் திரட்டி எடுத்துக் கொண்ட மாவை சதுரமாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் இந்த மாவு சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.

பொறித்து எடுத்த கலகல பிஸ்கட்களை ஒரு தட்டிற்கு மாற்றி லேசாக அரைத்த சர்க்கரை தூள் சேர்த்து பரிமாறினால் சுவை அருமையோ அருமையாக இருக்கும்.