ஆடி மாதம் துவங்கியாச்சு இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேஷ நாள் தான். ஏதாவது ஒரு இனிப்பு வகை வைத்து இறைவனை வழிபடுவது நம் பாரம்பரியங்களில் ஒன்று. அந்த இனிப்பு வகை எப்போதும் போல சர்க்கரை பொங்கல், பாயாசம், கேசரி என இல்லாமல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக சற்று வித்தியாசமாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த இனிப்பு பலகாரம் செய்வதற்கு ஒரு கப் பருத்திக்கொட்டை இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து முந்தைய நாள் இரவு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலை மீண்டும் ஒரு முறை சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி பருத்திக்கொட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பருத்தி கொட்டையை நன்கு அரைத்து இரண்டு முறை கெட்டியான பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நமக்கு இரண்டு கப் கெட்டியான பருத்திப்பால் கிடைத்துள்ளது.
இப்பொழுது இரண்டு கப் பருத்திப்பாலை ஒரு கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தேங்காய் பால், அரை கப் காய்ச்சி ஆற வைத்த பசும்பால் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட வேண்டும்.
மிதமான தீயில் இந்த கலவை ஐந்து முதல் 10 நிமிடம் நன்கு கொதித்து வரவேண்டும். இப்பொழுது இடையே அடிக்கடி கிளறி கொடுத்தால் போதுமானது. பத்து நிமிடம் கழித்து ஒரு கப் கருப்பட்டி பொடியாக தட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலர வேண்டும். தொடர்ந்து பத்து முதல் 15 நிமிடம் கிளரும் பொழுது பருத்திப்பால் கெட்டியாக மாற துவங்கும்.
தேவைப்பட்டால் நெய் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும் 15 முதல் 20 நிமிடம் சிலரும் பொழுது கெட்டியான அல்வா பதத்திற்கு வந்துவிடும். இறுதியாக நெய்யில் வறுத்த கைப்பிடி அளவு முந்திரி மற்றும் கருப்பு திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பருத்திப்பால் அல்வா. பாரம்பரியமான உணவுகளை ஆடி வெள்ளியின் போது சமைத்து இறைவனுக்கு படைத்து நாமும் சாப்பிட்டு மகிழலாம்.