தற்போதைய காலங்களில் விதவிதமான ஸ்னாக்ஸ் வகைகள் பல வந்தாலும் பாட்டி வீடுகளில் மாலை நேரங்களில் செய்யும் பணியாரத்திற்கு தனி சுவைதான். அதிலும் சர்க்கரை, வெல்லம் என சேர்க்காமல் சத்து நிறைந்த கருப்பட்டி சேர்த்து தித்திப்பான சுவையில் செய்யப்படும் கருப்பட்டி பணியாரம் நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றரை கப் அரிசி, அரை கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக சேர்த்து ஊற வைக்கும் பொழுது வெளியே வைக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்தால் மாவு புசுபுசுவென வரும். நான்கு மணி நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மாவை நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு கப் கருப்பட்டி, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் வாசனைக்காக நான்கு ஏலக்காய் இடித்து சேர்த்துக் கொள்ளலாம். கூடுதலாக அரை தேக்கரண்டி சுக்குத்தூள் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். கருப்பட்டி பாகு நன்கு கொதித்து கெட்டியாக வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவேண்டும்.
இந்த கருப்பட்டி பாகை அப்படியே நாம் அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
உடைத்து விட்ட முட்டை குழம்பிற்கு பதிலாக உடைத்துவிட்ட முட்டை பிரியாணி! திருப்பி இதோ..
இப்பொழுது பணியாரம் செய்வதற்கு மாவு தயாராக உள்ளது. பணியார கல்லை அடுப்பில் வைத்து தாராளமாக அதன் குழிகளில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியார கல் தயாரானதும் குழியின் முக்கால் பாகத்திற்கு மாவு சேர்த்து பொன்னிறமாக வேக வைக்க வேண்டும். மாவு ஒரு பக்கம் வெந்ததும் மாற்றிப் போட்டு மற்றொரு பக்கம் நன்கு வேக வைக்க வேண்டும்.
இப்படி இன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான கருப்பட்டி குழி பணியாரம் தயார். மாலை நேரங்களில் இது போன்ற சத்து நிறைந்த கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது விரும்பி சாப்பிடுவார்கள்.