மீல்மேக்கர் வைத்து இப்படி கூட கிரேவி சமைக்கலாமா? அட்டகாசமான மும்பை மலாய் சங்க்ஸ் ரெசிபி இதோ!

பொதுவாக நம் வீடுகளில் மீல்மேக்கர் வைத்து சமைக்கும் பொழுது சிவப்பு நிறத்தில் காரசாரமாக கிரேவி, 65, மீல்மேக்கர் மசாலா செய்வது வழக்கம். அப்படி காரம் சற்று தூக்கலாக செய்யப்படும் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, தோசை, சூடான சாதம் இவற்றிற்கு சிறப்பாக பொருந்தும். மேலும் சில நேரங்களில் பிரியாணி, தேங்காய் பால் சாதம், புலாவ் இவற்றிற்கும் அட்டகாசமான பொருத்தமாக இருக்கும். இந்த முறை மீல்மேக்கர் வைத்து சற்று காரம் குறைவாக இருக்கும் வெள்ளை கிரேவி செய்து பார்க்கலாம் வாங்க. அதாவது மும்பை ஸ்டைல் மலாய் சாங்ஸ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் ஒரு கப் மீல் மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீருடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து குறைந்தது 10 முதல் 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். மீல்மேக்கர் கொதிக்கும் தண்ணீருடன் சேர்ந்த உடன் நன்கு உப்பலாக மாறி வரும். அதன் பின்பு தண்ணீரை வடிகட்டி நன்கு பிழிந்து ஒரு தட்டிற்கு மாற்று வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் கெட்டி தயிர், ஒரு கைப்பிடி அளவு முந்திரி பருப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுக்க வேண்டும். அதாவது 15 முதல் 20 முந்திரி பருப்புகள் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் சேர்க்காமல் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான கடாயில் அரை தேக்கரண்டி சீரகம், அண்ணாச்சி பூ, இரண்டு துண்டு பட்டை, இரண்டு துண்டு கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதை அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் தயிர் மற்றும் முந்திரி பருப்பு விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். குறைந்தது 8 முதல் 10 நிமிடங்களில் கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வரும் வரை சமைக்க வேண்டும். அடுத்ததாக இதில் நன்கு இடித்த இரண்டு பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எந்த மாசம் ஆக இருந்தாலும் சரி… இந்த மீன் குழம்பை தினமும் கூட சாப்பிடலாம்! சைவ மீன் குழம்பு ரெசிபி!

மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி ஃபுட் கிரீம், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக கிரேவி பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து நாம் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் மீல்மேக்கரை சேர்த்துக் கொள்ளலாம். மீல்மேக்கர் சேர்த்த பிறகு 5 நிமிடம் கொதிக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு வாசனைக்காக கஸ்தூரி மேத்தி தூவி கிளறி கொடுத்து இறக்கினார் சுவையான மும்பை மலாய் சங்க்ஸ் தயார்.