15 நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் தயார்…. டேஸ்டான மற்றும் ஹெல்தியான சோயா பிரியாணி!

லஞ்ச் பாக்ஸ்க்கு பிரியாணி கொடுத்து விட வேண்டும் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆசையாக இருக்கும். ஆனால் பிரியாணி காலை வேலைகளில் சமைப்பது சற்று கடினமான வேலை என பலரும் அதை மறுத்து விடுவார்கள். ஆனால் பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை குழந்தைகளுக்கு அதிகமாகவே இருக்கும். இந்த முறை எளிமையான ரெசிபியை பயன்படுத்தி சோயா வைத்து அருமையான மற்றும் ஹெல்த்தியான பிரியாணி செய்யலாம் வாங்க. 15 நிமிடத்தில் சோயா பிரியாணி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

முதலில் பிரியாணி செய்வதற்கு மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், பட்டை இரண்டு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, அண்ணாச்சி பூ ஒன்று, முந்திரிப்பருப்பு 6, கைப்பிடி அளவு சின்ன வெங்காயம், நன்கு பழுத்த தக்காளி பழம் இரண்டு, கைப்பிடி அளவு புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து மையாக அரைக்க வேண்டும்.

நாம் சேர்த்த பொருட்கள் பாதியாக அரைந்ததும் அதே மிக்ஸி ஜாரில் மீண்டும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மீண்டும் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக குக்கரின் ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை அதில் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம்.

இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் ஒரு கப் தயிர் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தயிர் நன்றாக கலந்ததும் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு, பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் வெந்நீரில் ஊறவைத்த ஒரு கப் சோயாவை குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சோயாவுடன் மசாலா கலவை நன்கு சேரும் விதத்தில் கிளறி கொடுக்க வேண்டும். ஒன்று முதல் இரண்டு நிமிடம் இதமான தீயில் நன்கு கிளற வேண்டும்.

ஈரல் தொக்கு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு சைவத்தில் ஈரல் தொக்கு! கொஞ்சம் கூட குறையாத அதே ஊட்டச்சத்துடன் செய்வதற்கான ரெசிபி இதோ!

அதன் பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் என்ற அளவு தண்ணீரை குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் ஊற வைத்திருக்கும் ஒரு கப் பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக தேவைப்பட்டால் உப்பு ஒரு முறை சரிபார்த்து அரை தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து குக்கரை மூடி விட வேண்டும். மிதமான தீயில் மூன்று விசில்கள் வரை வேக வைத்து இறக்கினான் சுவையான சோயா பிரியாணி தயார். இந்த பிரியாணியில் வெங்காயம் தக்காளி என தனித்தனியாக வெளியே தெரியாத காரணத்தினால் குழந்தைகள் அப்படி விரும்பி சாப்பிடுவார்கள்.

Exit mobile version