தேங்காய் இருந்தால் போதும் வாயில் வைத்ததும் கரையும் ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார்…!

குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் என்றால் நிச்சயம் பிடிக்கும். ஆனால் குழந்தை பருவத்திலேயே அதிக அளவு கடைகளில் இனிப்பு வாங்கி கொடுப்பதோ அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்த இனிப்புகளை கொடுப்பதோ அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வீட்டிலேயே வெள்ளை சர்க்கரை இல்லாமல், எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ஆரோக்கியமான முறையில் ஒரு இனிப்பு வகையை செய்தால் எப்படி இருக்கும்.

தீபாவளிக்கு செய்ய மறக்காதீங்க பாரம்பரிய இனிப்பு வகையான சுழியம்…!

பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு இது போன்ற ஒரு ஸ்வீட் வகையை செய்து கொடுத்துப்பாருங்கள். நிச்சயம் அவர்கள் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். இதற்கு அதிகமான பொருட்கள் தேவை இல்லை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிமையாக இந்த இனிப்பினை நீங்கள் செய்யலாம். வாருங்கள் சுவையான இந்த இனிப்பை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஒரு கப் அளவு தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். தண்ணீர் நிறைய சேர்க்காமல் இரண்டு கப் அளவு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை அரைத்ததும் வடிகட்டி பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதல் பால், இரண்டாம் பால் என்று எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கெட்டியாக ஒரே பாலாக எடுத்தால் போதுமானது.

மற்றொரு பாத்திரத்தில் ஒரு கட்டி வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அரை கப் அளவு தண்ணீர் விட்டு கரைத்து கொள்ள வேண்டும். வெல்லம் தண்ணீரில் கரைந்தால் போதும் பாகாக காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. வெல்லம் தண்ணீரில் நன்றாக கரைந்ததும் இதனை வடிகட்டி விட வேண்டும். வெள்ளத்தில் தூசி, மண் போன்றவை இருப்பதற்கு வாய்ப்பு உண்டு எனவே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது கடாயில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்க்கவும். நெய் உருகியதும் ஒரு கப் அளவு கோதுமை மாவை சேர்த்து நெய்யில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். கோதுமை மாவின் பச்சை வாசனை போகும் வரை இதனை வறுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வேறு ஏதும் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

கோதுமை மாவு நன்றாக வறுபட்டதும் நாம் காய்ச்சி வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து கட்டிகள் ஏதும் இல்லாதவாறு கிளறி விட வேண்டும். பிறகு தேங்காய் பாலையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து அனைத்தும் சேர்ந்து இறுகி வரும் வரை கிளறி விடவும்.

தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்து நன்றாக இறுகி வந்த பிறகு இது பாத்திரத்தோடு ஒட்டாமல் சுருண்டு வந்திருக்கும். இந்த நிலையில் இதனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி சமமாக தட்டி ஆற விட வேண்டும் நன்றாக ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி இதனை பரிமாறலாம். அவ்வளவுதான் மிருதுவான வாயில் வைத்ததும் கரையக்கூடிய தேங்காய் பால் இனிப்பு தயாராகி விட்டது.