கல்யாண வீட்டு ஸ்பெஷல் சேமியா ரவா கிச்சடி! அருமையான ரெசிபி இதோ…

கிச்சடி என்றாலே பலர் முகம் சுளித்தாலும் இதற்கு என தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. சூடாக கிச்சடி செய்து அதற்கு சைடிஷ் ஆக தேங்காய் சட்னி, இட்லி பொடி, உளுந்த வடை வைத்து சாப்பிடும் பொழுது விருந்து சாப்பிட்ட திருப்தி அப்படியே கிடைக்கும். அதிலும் கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் கிச்சடி குறைவாக இருந்தாலும் சுவையில் நம்மை மெய்மறக்கச் செய்து விடும். அப்படி கல்யாண வீட்டு சேமியா ரவா கிச்சடி நம் வீட்டிலேயே செய்வதற்காக எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கப் சேமியா சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். சேமியா பொன்னிறமாக மாறியதும் ஒரு கப் ரவை சேர்த்து மீண்டும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.வறுத்த ரவை மற்றும் சேமியாவை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி வைத்து விடவும்.

மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, கைப்பிடி அளவு முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பருப்புகள் அனைத்தும் பொன்னிறமாக நிறம் மாறியதும் ஒரு சிறிய துண்டி இஞ்சியை இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதம் அளவு வதங்கிய பிறகு நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி நன்கு மசிந்த பிறகு நமக்கு பிடித்தமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

அதாவது பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி இவற்றை சேர்த்து எண்ணெயோடு ஒருமுறை கிளற வேண்டும். காய்கறிகள் எண்ணெயோடு வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி நெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி கொடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது காய்கறிகள் மற்றும் கிச்சடிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் வறுத்து வைத்திருக்கும் சேமியா மற்றும் ரவையை சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் ஐந்து நிமிடம் கிளறி கொடுக்க வேண்டும்.

கிலோ கணக்கில் சாப்பிட்டாலும் துளி கூட எடை அதிகரிக்காத மஞ்ச பூசணி வைத்து அருமையான தொக்கு ரெசிபி!

தண்ணீர் வற்றி கிச்சடி கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் மிதமான தீயில் இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு சேமியா ரவை கிச்சடி தயார்..