கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் பந்தி சாப்பாடுகளில் கலைவாணி இலை போட்டு சாதத்திற்கு அடுத்து நெய் சேர்த்து சாம்பார் பரிமாறப்படும். கமகமக்கும் வாசத்துடன் பல காய்கறிகள் சேர்த்து பரிமாறப்படும் அந்த சாம்பாருக்கு சுவை தனிதான். வீட்டில் எப்படித்தான் சமைத்தாலும் இதுபோன்ற சுவை வருவதில்லை என வருத்தப்படும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க கல்யாண வீட்டில் கொடுக்கப்படும் அதே அரைச்சு விட்ட சாம்பார் நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபி இதோ…
முதலில் ஒரு குக்கரில் ஒரு கப் துவரம் பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மீண்டும் தேவையான அளவு தண்ணீர், 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள், கால் தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து மூடி போட்டு மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
விசில் வந்து குக்கரில் அழுத்தம் குறைந்த பின் குக்கரை திறந்து பருப்பை நன்கு மத்து கொண்டு மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கால் தேக்கரண்டி வெந்தயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து 10 முதல் 15 சின்ன வெங்காயம், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். குறிப்பாக சின்ன வெங்காயம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கி வரும் நேரத்தில் இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இதன் பிறகு நமக்கு விருப்பமான காய்கறிகளை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதாவது முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், பூசணி பழம், மாங்காய் என நமக்கு விருப்பமான காய்கறிகளை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். காய்கறிகள் வதக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
அதன் பிறகு காய்கறிகள் வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் வெந்துவரும் நேரத்தில் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் சாம்பார்ருக்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம்.
அதற்காக ஒரு சிறிய கடாயின் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தை கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி தனியா, அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கருவேப்பிலை, காரத்திற்கு ஏற்ப சாய்ந்த வத்தல் ஐந்து, அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
மசாலா எதுவும் சேர்க்காமல் எளிமையான முறையில் காய்கறிகள் வைத்து தக்காளி கடையல் ரெசிபி!
இப்பொழுது வருத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றிக் கொள்ளலாம். காய்கறிகள் நன்கு கொதித்து வெந்து வரும் நேரத்தில் நாம் வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக நாம் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் துவரம் பருப்பு, ஒரு தேக்கரண்டி வெல்லம் , இரண்டு தேக்கரண்டி நெய், கைப்பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக கால் கப் தேங்காய் துருவலை சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு அரைச்சு விட்ட சாம்பார் தயார்.