டீக்கடைகளின் கிடைக்கும் போண்டாவில் பெரும்பாலும் மைதா சேர்ப்பது வழக்கமான ஒன்று. குழந்தைகள் மைதா சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது என்பதனால் வீட்டில் செய்யும் பொழுது மைதா தவிர்த்து அதற்கு பதிலாக சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து சமைப்பது வழக்கம். இந்த முறை நம் வீட்டு குட்டீஸ்கள் தாராளமாக சாப்பிட்டாலும் உடலுக்கு கேடு தராத விதத்தில் அரிசி மாவு வைத்து அருமையான போண்டா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
முதலில் 200 கிராம் அளவுள்ள பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் தண்ணீரை வடிகட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளலாம்.
அரிசி அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை. அடுத்ததாக இரண்டு உருளைக்கிழங்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வேக வைத்த உருளைக்கிழங்கும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவுடன் வேகவைத்து அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி மற்றும் கருவேப்பிலை இலைகள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
சிக்கன் மற்றும் மட்டனுடன் போட்டி போடும் சுவையில் தரமாக களமிறங்கிய சோயா மிளகு வறுவல்!
அடுத்ததாக இதில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா, போண்டாவிற்கு தேவையான அளவு உப்பு, , சிறிதளவு தண்ணீர் கலந்து நன்கு கெட்டியாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது போண்டாவிற்கு மாவு தயாராக உள்ளது.
ஒரு அகலமான கடாயின் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான அரிசி மாவு போண்டா தயார். இந்த போண்டாவில் மைதா மாவு சேர்க்காததால் குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.