தை மாதத்தில் பொங்கல் பண்டிகை தவிர முக்கியமான இரண்டு நாட்கள் ஒன்று முருகனை வழிபடும் தைப்பூசம் மற்றொன்று முன்னோர்களை வழிபடும் தை அமாவாசை. தை அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து அனைவரும் முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்று சைவ உணவுகளை சமைத்து படையல் செய்து வழிபாடு நடத்துவார்கள். விரத சாப்பாடு என்றாலே கட்டாயம் சாம்பார் இடம்பிடித்து விடும்.

இந்த முறை வழக்கமாக செய்யும் சாம்பார் போன்று இல்லாமல் வித்தியாசமாக இப்படி சாம்பார் செய்து பாருங்கள். விரத சாம்பார் என்பதால் வெங்காயம் பூண்டு சேர்க்காமல் வித்தியாசமாக இருக்கும். பொடி இடித்து சேர்த்து செய்யும் இந்த சாம்பார் திருநெல்வேலி பகுதிகளில் செய்யும் இடி சாம்பார் போன்ற சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த விரத சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
மகாளய அமாவாசை அன்று சைட் டிஷ் புடலங்காய் கூட்டு இப்படி செய்து பாருங்கள்!
இந்த சாம்பார் செய்வதற்கு 100 கிராம் அளவு துவரம் பருப்பு 50 கிராம் அளவு பாசிப்பருப்பை எடுத்து நன்றாக அலசி கொள்ள வேண்டும். 150 கிராம் அளவிற்கு முழுவதும் துவரம் பருப்பு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை மூன்று முறை நன்றாக தண்ணீரில் அலசி 300 மில்லி லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்க்கவும். இந்த பருப்புடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடி விசில் வைக்க வேண்டும். மூன்று விசில் வந்த பிறகு குக்கரை நிறுத்தி விடலாம்.

பருப்பு வேகும் நேரத்தில் இதற்கான பொடியை தயார் செய்து கொள்ளலாம். ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் அரிசி, அரை டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்கு வறுபட்டு நிறம் மாறி வந்ததும் இதனை ஆறவைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் தனியாக குழம்பு மிளகாய்த்தூள் சேர்ப்பதால் இதில் மல்லி மற்றும் வர மிளகாய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
எலுமிச்சை பழ அளவு புளியை ஊற வைத்துக் கொள்ளவும். இந்த சாம்பாருக்கு நாம் நமக்கு விருப்பமான காய்கறிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வாழைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை இப்பொழுது ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.

விசில் வந்து காய்கறிகள் நன்கு வெந்த பிறகு குக்கரில் நாம் ஏற்கனவே வேகவைத்து வைத்திருக்கும் பருப்பு மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து அரைத்து அதையும் இந்த சாம்பாருடன் சேர்க்கவும். நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். பொடி மீதம் இருந்தால் இதனை சேமித்து வைத்து பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுலபமா செய்யலாம் சுவையான வெண்டைக்காய் பொரியல்.. இனி இப்படி செய்து பாருங்கள்…!

இப்பொழுது குழம்புக்கு தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை இலை, நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், இரண்டு வரமிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு நறுக்கிய ஒரு தக்காளியை இதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பிறகு இதனை நாம் கொதிக்கின்ற சாம்பாரில் சேர்த்து கொதிக்க விடவும். சாம்பார் நன்கு கொதித்து வந்த பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் அட்டகாசமான விரத சாம்பார் தயார்.