மீன் குழம்பு அனைவருக்கும் பிடித்தமான உணவு வகை ஆகும். அதுவும் கிராமத்து சுவையில் செய்யும் மீன் குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த மீன் குழம்பு மட்டும் தான் ஒரு நாள் வைத்து சாப்பிட்டாலும் இதன் சுவை குறையாமல் அதிகரிக்கும். கடல் மீன், குளத்து மீன் என எந்த மீனில் குழம்பு செய்தாலும் அனைத்து மீனும் அதன் தனித்துவமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இப்பொழுது நெத்திலி மீன் வைத்து கிராமத்து சுவையில் எப்படி நெத்திலி மீன் குழம்பு செய்வது என்பதை பார்க்கலாம்.
நெத்திலி மீன் குழம்பு செய்வதற்கு முதலில் மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் அளவிற்கு சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டை விழுதாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு பழுத்த ஒரு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு இந்த குழம்பிற்கான மசாலா தயாரிக்க ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவிற்கு தேங்காய் துருவல் சேர்க்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு இதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிராமத்து ஸ்டைலில் வீடே மணக்கும் மீன் குழம்பு…! மீன் குழம்பு அடுத்த முறை இப்படி செய்ய மறக்காதீர்கள்!
பிறகு ஒரு மண் சட்டியில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு பொரிந்ததும் ஒரு கப் அளவிற்கு சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொள்ளவும். தக்காளி வதங்கி மென்மையானதும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் வதங்கி பச்சை வாசனை போனதும் கால் கப் அளவிற்கு புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொள்ளலாம். பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து சிறிதளவு கறிவேப்பிலை தூவி 10 நிமிடங்கள் மூடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி மீனை சேர்த்து மீன் உடைந்து விடாமல் கிளறி மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வளவுதான் மணம் நிறைந்த சுவையான மீன் குழம்பு தயார்.