சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமான வெஜிடபிள் குருமா…!

வெஜிடபிள் குருமா ஒரு அட்டகாசமான சைட் டிஷ் ரெசிபி ஆகும். இது சப்பாத்தி பூரி மற்றும் பரோட்டா போன்ற உணவுகளுக்கு மிக அருமையாக இருக்கும். இதில் அதிக அளவு காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்து நிறைந்ததாகவும் இந்த குருமா இருக்கும். மேலும் இதனை தென்னிந்திய உணவு முறைப்போல தேங்காய் சேர்த்து செய்வதால் இந்த குருமா கெட்டியாகவும் சுவை நிறைந்ததாகவும் இருக்கிறது. காய்கறிகளை விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துக்கள் கிடைக்க இந்த முறையில் காய்கறிகளை செய்து கொடுத்தால் சுவை நிறைந்ததாக இருப்பதால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மீதமான சப்பாத்தி வைத்து அருமையான வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ்!

இந்த வெஜிடபிள் குருமா செய்வதற்கு முதலில் கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு காலிபிளவர் போன்ற காய்கறிகளை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காய்கறியும் ஒரு கப் வரும் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது கடாயில் ஒரு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்த்து அதில் 2 பிரியாணி இலை, ஒரு பட்டை, மூன்று கிராம்பு, 3 ஏலக்காய், ஒரு ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும். பிறகு பொடி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பின்பு ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் சீரகத்தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளிகளை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் இதனுடன் ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து சிறிது நேரம் அப்படியே வேகவிட வேண்டும்.

காய்கறிகள் வேகும் நேரத்திற்குள் நாம் தேங்காய் விழுதை தயார் செய்துவிடலாம். கால் கப் அளவு தேங்காயுடன் இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, 10 முந்திரி, ஒரு ஸ்பூன் கசகசா ஆகியனவற்றை சேர்த்து நன்கு விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் ஓரளவு வெந்த நிலையில் இந்த தேங்காயை இதனுடன் ஊற்றி கொதிக்க வைக்கவும். அனைத்தும் நன்கு கொதித்து காய்கறிகள் முழுதாய் வெந்ததும் இதனை கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடலாம்.

ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை வைத்து சூப்பரான சத்தான சன்னா மசாலா கிரேவி…!

அவ்வளவுதான் சுவையான சத்தான வெஜிடபிள் குருமா தயார்!

Exit mobile version