ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை வைத்து சூப்பரான சத்தான சன்னா மசாலா கிரேவி…!

சத்துக்களும் சுவையும் நிறைந்த ஒரு உணவுப் பொருள்தான் கொண்டைக்கடலை. கொண்டைக்கடலையில் புரதம், விட்டமின் பி 12, ஃபோலேட், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் சம்பந்தப்பட்ட குடல் பிரச்சனைகளையும் இந்த கொண்டைக்கடலை தீர்க்கிறது. மேலும் மலச்சிக்கல் தொல்லையிலிருந்தும் தீர்வு தருகிறது. ரத்த சோகையில் இருந்து பாதுகாக்கும் ஒரு நல்ல உணவு பொருளாகும். மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கொண்டைக் கடலை நல்ல தீர்வு. இப்பொழுது இந்த கொண்டை கடலையை வைத்து எப்படி சுவையான சன்னா மசாலா கிரேவி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முட்டை வைத்து சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு… மறக்காம செய்து பாருங்கள்!

சென்னா மசாலா கிரேவி செய்ய 200 கிராம் அளவிற்கு சென்னாவை முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும். இந்த சென்னா 8 முதல் 10 மணி நேரம் நன்கு ஊற வேண்டும். ஊறிய சென்னாவை குக்கரில் சேர்த்து சன்னா வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி இதனை அடுப்பில் வைத்து விடலாம். குறைந்தது ஐந்து விசில் வரை இது வேக வேண்டும்.

கொண்டைக்கடலை நன்கு வெந்த பிறகு ஒரு கடாயில் மசாலா தயார் செய்வதற்கு இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயத்துடன் ஒரு துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, இரண்டு ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இப்பொழுது பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய தக்காளிகளை இதனுடன் சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு பட்டை துண்டு, ஒரு பிரியாணி இலை, மூன்று கிராம்பு மூன்று ஏலக்காய், அரை ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலையையும் இதனுடன் சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர் இருந்தால் அதையும் இதனுடன் சேர்த்து விடவும். காரணம் தண்ணீரில் அதிக சத்துக்கள் இருக்கும். கரண்டியை கொண்டு சிறிய அளவு கொண்டை கடலைகளை மட்டும் மசித்து விடலாம். இதனால் கிரேவி கொஞ்சம் கெட்டியாக கிடைக்கும். நன்கு கொதித்து வந்ததும் புளிப்பு சுவை விரும்புபவர்கள் கொஞ்சமாக எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இறுதியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடலாம்.

மீதமான சப்பாத்தி வைத்து அருமையான வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ்!

அவ்வளவுதான் சுவையான சத்தான கொண்டைக்கடலை மசாலா கிரேவி தயார்!

Exit mobile version