வாரத்தின் ஏழு நாட்களுக்கும் விதவிதமான சட்னி இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் விரும்புவது உண்டு. அப்படி வித்தியாசமாக என்ன சட்னி வைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு உளுத்தம் பருப்பு சட்னி ஒரு நல்ல தேர்வு. உளுத்தம் பருப்பு உடலுக்கும் மிகவும் நல்லது. இந்த உளுத்தம் பருப்பை வைத்து செய்யும் சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் நன்றாக இருக்கும். வாருங்கள் இந்த உளுத்தம் பருப்பு சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
இட்லி தோசைக்கு சுவையான கார சட்னி…! இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!
உளுத்தம் பருப்பு சட்னி செய்வதற்கு முதலில் மூன்று மேஜை கரண்டி அளவிற்கு உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உளுத்தம் பருப்பை வானலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுத்தம் பருப்பு நன்கு சிவக்கும் வரை இதனை வறுக்கவும். வறுத்து இதை தனியாக வைத்து விடவும். இப்பொழுது அதே கடாயில் 5 வர மிளகாய் சேர்த்து அதையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அதையும் நன்கு வறுக்கவும்.
இப்பொழுது வறுத்த உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து சின்ன வெங்காயம் மற்றும் நான்கு பல் பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நன்கு பழுத்த பெரிய தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் உளுத்தம் பருப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். மிகச் சிறிய அளவில் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி விடலாம்.
கொத்தமல்லி வைத்து இந்த சட்னி செய்து பாருங்கள்.. பிறகு அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பாங்க!
இந்த சட்னி சற்று வழவழப்பாக தான் இருக்கும் ஆனால் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அவ்வளவுதான் சுவையான உளுத்தம் பருப்பு சட்னி தயாராகி விட்டது…!