கொத்தமல்லி வைத்து இந்த சட்னி செய்து பாருங்கள்.. பிறகு அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பாங்க!

கொத்தமல்லி சட்னி மணமும் சுவையும் நிறைந்த ஒரு சட்னியாகும். அதுவும் தேங்காய், புதினா போன்றவை சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையாக இருக்கும். இந்த கொத்தமல்லி சட்னி இட்லி, தோசை என அனைத்திற்கும் மிகப் பொருத்தமான சைடிஷ் ஆக இருக்கும். இதை செய்வதும் மிக மிக சுலபம். இந்த சுவை நிறைந்த எளிமையான கொத்தமல்லி சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இட்லி தோசை என அனைத்திற்கும் ஏற்ற ருசியான கறிவேப்பிலை சட்னி…!

கொத்தமல்லி சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் ஒரு மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய ஐந்து பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் இதனுடன் சேர்த்து வதக்கவும்.

காரத்திற்காக ஐந்து பச்சை மிளகாய்களை நறுக்கி வெங்காயத்துடன் சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அரை கப் தேங்காய் சேர்த்து அதையும் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வதங்கியதும் சிறிதளவு புளி, இரண்டு கொத்து கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி அளவு புதினா, ஒரு கட்டு கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். கொத்தமல்லியின் வேர்ப்பகுதியை நீக்கி நன்கு அலசிவிட்டு தண்டோடு சேர்த்து வதக்கவும்.

நீண்ட நேரம் வதக்க வேண்டிய அவசியம் இல்லை சில நிமிடங்கள் வதக்கிய பிறகு தேவையான அளவு கல் உப்பு மற்றும் பெருங்காயத்து சேர்ந்து கிளறி இறக்கி விடலாம். இது நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சட்னியை அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் இரண்டு பட்ட மிளகாய்களை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இதனை சட்னியுடன் சேர்த்து கலந்து விடவும்.

சுலபமா செய்யலாம் வேர்க்கடலை சட்னி! எத்தனை இட்லி சாப்பிட்டீர்கள் என்று கணக்கே தெரியாது…

அவ்வளவுதான் சுவையான மனம் நிறைந்த கொத்தமல்லி சட்னி தயாராகி விட்டது.

Exit mobile version