வேர்க்கடலை அல்லது நிலக்கடலை என்பது சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை வகையாகும். வேர்க்கடலையில் புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் என பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களை அதிகப்படுத்தி கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய ஆற்றல் வேர்க்கடலைக்கு உண்டு. எனவே இது இதய ஆரோக்கியத்தில் பெரிதளவில் நன்மை புரிகிறது. இந்த வேர்க்கடலையை வைத்து அருமையான வேர்கடலை சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க!
வேர்க்கடலை சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் அரை கப் அளவு வேர்க்கடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் நான்கு வர மிளகாய்களை கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பல் பூண்டு மற்றும் ஒரு சிறிய அளவு புளி சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
மிளகாய், பூண்டு, புளி ஆகியவை நன்கு வதங்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து இரண்டு மேசை கரண்டி அளவு தேங்காய் பூ சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து இதனை அரைத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலையை நீண்ட நேரம் அரைத்தால் அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் எனவே நீண்ட நேரம் அரைக்க கூடாது.
இட்லி தோசை என அனைத்திற்கும் ஏற்ற ருசியான கறிவேப்பிலை சட்னி…!
இதோ சட்னி அரைத்தாகி விட்டது. இப்பொழுது இதனை தாளிக்க வேண்டியது தான். ஒரு சிறிய தாளிக்கும் கரண்டியில் ஒரு மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்த பிறகு ஒரு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஒரு வர மிளகாய் சேர்க்கவும். ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு இதனை சட்னியில் சேர்க்கவும்.
அவ்வளவுதான் சுலபமான சுவை நிறைந்த வேர்க்கடலை சட்னி தயாராகி விட்டது!