மாலை நேரம் வந்தாலே பலருக்கும் சூடாக டீ அல்லது காபி பருக வேண்டும் என்று தோன்றும். டீ, காபி புத்துணர்ச்சியை தருவது போல் உணர்ந்தாலும் எதுவும் அளவுக்கு மீறினால் ஆபத்து தான். எனவே இதற்கு மாற்றாக சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றினால் தக்காளியை வைத்து இந்த சுவையான சூப்பினை செய்து பாருங்கள். இதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை தக்காளியை மட்டும் வைத்து சுவையான இந்த சூப்பை தயார் செய்ய முடியும்.
இந்த தக்காளி சூப் செய்வதற்கு நன்கு பழுத்த நான்கு தக்காளிகளை எடுத்து கொள்ளவும். இரண்டு பெரிய வெங்காயத்தையும் எடுத்துக் கொள்ளவும் இவை இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். இப்பொழுது ஒரு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு சிறிய பட்டை துண்டு, ஒரு பிரியாணி இலை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் மிளகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஒரு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
கால் ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி சேர்த்து இரண்டு மேசை கரண்டி துவரம் பருப்பு மற்றும் ஒரு மேசை கரண்டி பாசிப்பருப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும். குக்கர் ஐந்து விசில் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
குக்கர் விசில் வந்த பிறகு சிறிது நேரம் கழித்து பருப்பு தக்காளி எல்லாம் நன்கு கரைந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இவை கரைந்த பின்பு கொதிக்க விட வேண்டும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடலாம். கால் டம்ளர் அளவு தேங்காய் பால் ஊற்ற வேண்டும். இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்த்து, கொத்தமல்லி தலையை பொடியாக நறுக்கி இதில் தூவி பரிமாறலாம்.
அவ்வளவுதான் சுவையான தக்காளி சூப் தயாராகிவிடும்.