சட்னிக்கு பதிலாக செய்து பாருங்கள் ஹோட்டல் சுவையிலேயே தக்காளி கடையல்…

ஹோட்டல் சுவையிலேயே தக்காளி கடையல் செய்தால் அது இட்லி தோசைக்கு அட்டகாசமான சைட் டிஷ் ஆக இருக்கும். வழக்கமான சட்னி, சாம்பார் போன்று இல்லாமல் வித்தியாசமான இந்த தக்காளி கடைசல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குழந்தைகளும் இந்த தக்காளி கடையலை ரசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவை நிறைந்த இந்த தக்காளி கடையல் செய்வது மிக மிக சுலபம் வாருங்கள் இந்த தக்காளி கடையலை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஒருமுறை இப்படி தக்காளி சட்னி செய்து பாருங்கள்… கையேந்தி பவன் ஸ்டைலில் அட்டகாசமான சட்னி ரெசிபி…!

தக்காளி கடையல் செய்வதற்கு ஒரு குக்கரில் நன்கு பழுத்த தக்காளி பழங்களை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். தோல் உரித்த மூன்று பல் பூண்டு மற்றும் காரத்திற்கு 5 பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இதற்கான மசாலாக்களை சேர்க்கலாம். கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் சாம்பார் தூள், அரை டீஸ்பூன் அளவிற்கு சோம்பு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து தக்காளி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இப்பொழுது குக்கரை மூடி விசில் வைத்து மிதமான தீயில் இரண்டு விசில் வரும் வரை வைக்க வேண்டும். விசில் வந்து அடங்கியதும் ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு மசித்து கடைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது மற்றொரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடுகு உளுந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். ஐந்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

சிறிதளவு கறிவேப்பிலை இலை சேர்த்து வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு நிறம் மாறியதும் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நிலையில் உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தக்காளி கடையலை இப்பொழுது சேர்த்து அரை டீஸ்பூன் அளவிற்கு வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். 10 நிமிடங்கள் வரை நன்கு கொதித்ததும் இதில் கால் கப் அளவு இட்லி மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

அசத்தலான சுவையில் தக்காளி குழம்பு ஒரு முறை செய்து பாருங்கள் ஒரு பருக்கை கூட மிஞ்சாது…!

மாவு சேர்த்த பிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை இதனை கொதிக்க விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி தூவி இறக்கினால் அட்டகாசமான தக்காளி கடையல் தயார்.