சிறுதானியங்களில் மிக முக்கியமான ஒன்றான தினை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கப்படுகிறது. திணையில் உடலுக்கு தேவையான கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது. மற்ற அரிசிகளை விட திணை அரிசியில் தான் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. எனவே எலும்புகளை வலுவடையச் செய்யக்கூடிய சக்தி திணை அரிசிக்கு உண்டு.
வைட்டமின் பி1 சத்து இந்த தினை அரிசியில் நிறைந்ததாக இருக்கிறது. எனவே இதயம் சீராக செயல்பட செய்ய இந்த தினை அரிசி உதவி புரிகிறது. மேலும் வைட்டமின் பி1 நிறைந்திருப்பதால் மறதி நோய் அல்லது அல்சைமர் நோய் வராமல் காக்கிறது. இரும்புச்சத்து நிறைந்து இருப்பதால் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் மூளை ஆரோக்கியம் அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த தினை அரிசியை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த திணை அரிசி வைத்து மொறுமொறுப்பான சுவையான தோசை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். திணை அரிசி தோசை செய்வதற்கு ஒரு கப் அளவு தினையை நல்ல தண்ணீர் விட்டு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தனியாக மற்றொரு பாத்திரத்தில் கால் கப் அளவு உளுந்து மற்றும் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கழுவி அதையும் ஊற வைக்க வேண்டும்.
ஹோட்டல் சுவையில் மொறுமொறுப்பான பச்சைப் பயறு தோசை…!
அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக 6 மணி நேரம் ஊற வைத்த பிறகு அரைப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கால் கப் அவலை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் திணை அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதே மிக்ஸி ஜாரில் நாம் ஊறவைத்து வைத்திருக்கும் அவலை சேர்த்து தண்ணீர் விட்டு அதையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் திணை மற்றும் உளுந்து மாவோடு இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
உப்பு சேர்த்து கரைத்த பிறகு இதனை அப்படியே வைத்து விட வேண்டும். இந்த திணை அரிசி மாவு குறைந்தது ஆறு மணி நேரம் நன்கு புளிக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தோசை நன்றாக இருக்கும். 6 மணி நேரத்திற்கு பிறகு நாம் வழக்கமாக தோசை சுடுவதை போல் கல்லை காயவைத்து இந்த மாவை மெல்லிசாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவக்க எடுத்தால் தினை தோசை தயார். இது சட்னி, சாம்பார் என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.