எத்தனை இட்லி சுட்டாலும் பத்தாது… தட்டுக்கடை ஸ்டைலில் தேங்காய் இல்லாத தண்ணி சட்னி…

இட்லி, தோசை என்றால் பெரும்பாலானோர் விரும்புவது தேங்காய் சட்னி தான். சூடான இட்லி அல்லது தோசையோடு தேங்காய், பொட்டுக்கடலை வைத்து அரைத்து ஒரு சிறிய தாளிப்பு செய்த இந்த சுவையான தேங்காய் சட்னி அனைவரின் விருப்பமான காம்பினேஷன் எனலாம். நீங்களும் தேங்காய் சட்னி பிரியர் தான் ஆனால் உங்கள் வீட்டில் தேங்காய் இல்லை என்றால் இனி கவலை வேண்டாம்.

ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க!

தேங்காய் இல்லாத நேரத்தில் தேங்காய் சட்னியை விட சுவை நிறைந்த தட்டுக்கடைகளில் கொடுக்கப்படும் இந்த தண்ணி சட்னியை முயற்சி செய்து பாருங்கள். அதன் பிறகு உங்கள் விருப்பமான சட்னிகளில் முதலிடம் இந்த தண்ணி சட்னிக்கு தான். வாருங்கள் தட்டுக்கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் அருமையான தண்ணீர் சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

இந்த தண்ணி சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். பிறகு நான்கு பல் பூண்டினை இதனுடன் சேர்க்கவும். சிறிது கறிவேப்பிலை மற்றும் 5 பச்சை மிளகாய்களை இரண்டாக கிள்ளி சேர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.

பூண்டு மற்றும் பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி ஆற விடலாம். இப்பொழுது அதே கடாயில் அரை கப் அளவு வறுத்த வேர்க்கடலையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வறுக்கப்பட்ட வேர்க்கடலை என்றால் இரண்டு நிமிடங்கள் வறுத்தால் போதும். இல்லையேல் நன்றாக வறுபடும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வேர்க்கடலை நன்றாக வறுபட்டதும் இதனுடன் கால் கப் அளவு பொட்டுக்கடலையையும் சேர்த்து இரண்டையும் சில நிமிடங்கள் வறுக்க வேண்டும். இரண்டும் நான்கு வறுபட்ட பிறகு இதனை அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து விடலாம். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிய அளவில் புளி சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு பவுலிற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பை சேர்க்கவும். கடுகு, உளுந்து நன்கு பொரிந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் நான்கு காய்ந்த மிளகாய்களை சேர்த்து தாளிக்கவும்.

இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற சத்தான முள்ளங்கி சட்னி…!

தாளிப்பை இப்பொழுது சட்னி உடன் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் அட்டகாசமான தண்ணி சட்னி தயார். இப்பொழுது சூடான இட்லியோடு இந்த சட்னியை நிறைய ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். எத்தனை இட்லி சாப்பிட்டீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அந்த அளவிற்கு இது சுவையாக இருக்கும்.

Exit mobile version