இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற சத்தான முள்ளங்கி சட்னி…!

முள்ளங்கி அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி ஆகும். இந்த முள்ளங்கி வைத்து சாம்பார், பொரியல் என பல ரெசிபிகளை செய்யலாம். ஆனால் இந்த முள்ளங்கியின் நறுமணம் பலருக்கும் பிடிக்காது. எனவே முள்ளங்கி வைத்து செய்யும் சாம்பார் பொரியல்களை அவ்வளவாக ருசித்து சாப்பிட மாட்டார்கள். இப்படி முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் முள்ளங்கி சட்னி இப்படி செய்து பாருங்கள். நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

முள்ளங்கி சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சிவக்க வறுத்த பிறகு இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை இலை, ஐந்து வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

ஒருமுறை இப்படி தக்காளி சட்னி செய்து பாருங்கள்… கையேந்தி பவன் ஸ்டைலில் அட்டகாசமான சட்னி ரெசிபி…!

சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து அதையும் மிதமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த அனைத்தையும் இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஆறவிடவும். இது ஆறும் வரை முள்ளங்கி சட்னிக்கு தேவையான மற்ற பொருட்களை வதக்கிக் கொள்ளலாம்.

ஒரு பேனில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஐந்து பல் பூண்டு மற்றும் பத்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றை வதக்கிய பிறகு இரண்டு நடுத்தர அளவு முள்ளங்கியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சட்னி சுவையாக இப்படி செய்து பாருங்கள்!

வெங்காயம் மற்றும் முள்ளங்கி நன்கு வதங்கியதும் சிறிதளவு தேங்காய் பற்களை சேர்த்து அதையும் வதக்கவும். தேங்காய் பல் நிறம் மாறி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி வதக்கி இறக்கி விடவும். வதக்கிய அனைத்தையும் நன்கு ஆற வைக்க வேண்டும். ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.

இதற்கு தாளிப்பு செய்வதற்கு ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் ஆகியவற்றை தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்து விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சட்னி தயார். இப்பொழுது சுவைத்து பாருங்கள். இதில் முள்ளங்கி சேர்த்து செய்தீர்கள் என்று தெரியாது அத்தனை சுவையாக இருக்கும்.

Exit mobile version