அசத்தலான சுவையில் தக்காளி குழம்பு ஒரு முறை செய்து பாருங்கள் ஒரு பருக்கை கூட மிஞ்சாது…!

தக்காளி குழம்பு சுவை நிறைந்த குழம்பு வகையாகும். சாதம் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்றது இந்த தக்காளி குழம்பு. காய்கறிகள் எதுவும் இல்லாத சமயத்தில் தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற அடிப்படையான காய்கறிகளை வைத்து எளிமையான சுவை நிறைந்த இந்த தக்காளி குழம்பை செய்ய முடியும். வாருங்கள் சுவையான இந்த தக்காளி குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இனி இப்படி செய்து பாருங்கள் சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் ஏற்ற சுவையான பிளைன் சால்னா..

தக்காளி குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். இவை பொறிந்த பிறகு ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, அரை டீஸ்பூன் அளவிற்கு சோம்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவற்றோடு இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். மூன்று பல் பூண்டை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் பூண்டு வதங்கியதும் 15 சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் முழுமையாக வதங்கிய பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும்படி வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நன்கு பழுத்த மூன்று தக்காளிகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு வதங்கி மென்மையாகி குழைய வேண்டும். தக்காளி வதங்கும் நேரத்தில் இதற்கான தேங்காய் விழுதை தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவிற்கு துருவிய தேங்காய் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தக்காளி நன்கு வெந்து குழைந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இந்த நிலையில் உப்பு மீண்டும் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். குழம்பு ஓரளவு கொதித்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான தக்காளி குழம்பு தயார்.