பாய் வீட்டு ஸ்டைலில் மணமணக்கும் மட்டன் தால்சா இப்படி செய்து பாருங்கள்..!

பிரியாணி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அதற்கு இணையாக வைக்கும் மணமணக்கும் மட்டன் தால்சா. அதிலும் குறிப்பாக பாய் வீட்டு பிரியாணி மற்றும் மட்டன் தால்சா என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மட்டன் எலும்புகளுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யும் இந்த தால்சா சுவை நிறைந்ததாக இருக்கும். வாருங்கள் பாய் வீட்டு சுவையிலேயே மணமணக்கும் மட்டன் தால்சாவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தால்சா செய்வதற்கு முதலில் ஒரு குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும் ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு 12 சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய இரண்டு பழுத்த தக்காளிகளை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு மட்டனை சேர்க்கலாம்.

வீடே மணக்கும் சுவை நிறைந்த முட்டை பிரியாணி… இப்படி செய்து பாருங்கள்…!

எலும்பு அதிகம் உள்ளவாறு அரை கிலோ அளவு மட்டனை சேர்த்துக் கொள்ள வேண்டும். மட்டனை சிறிது நேரம் வதக்கி இதனுடன் அரைக்கப் அளவு துவரம் பருப்பு, கால் கப் கடலை பருப்பை தண்ணீரில் நன்றாக அலசி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் மல்லி தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் மட்டன் மற்றும் பருப்பு சேர்ப்பதால் வழக்கமாக மட்டன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றுவது போல இல்லாமல் சற்று கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும்.

சுவையான சிக்கன் பிரியாணி குழையாமல் பிரஷர் குக்கரில் இப்படி செய்து பாருங்கள்…!

குக்கரை மூடி ஆறு விசில் வரும் வரை வைக்க வேண்டும். மிதமான சூட்டில் ஆறு விசில் வந்ததும் குக்கரை அணைத்து விடலாம். இப்பொழுது குக்கரை திறந்து இதில் ஒரு கத்திரிக்காய், பாதி மாங்காய், ஒரு வாழைக்காய், ஒரு முருங்கைக்காய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றி குக்கரை விசில் எதுவும் போடாமல் சாதாரண மூடிக்கொண்டு மூடி பத்து நிமிடங்கள் வரை அடுப்பில் வைக்க வேண்டும். தால்சா நன்றாக கொதித்ததும் இதற்கான தாளிப்பை செய்யலாம்.

இதற்கு ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, இரண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்க்கவும். பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை சிறிது நேரம் வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த தாளிப்பை ஏற்கனவே கொதித்திருக்கும் குழம்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான தால்சா தயாராகி விட்டது இதனை பிரியாணியுடன் ருசித்து மகிழலாம்.

Exit mobile version