அரிசி பருப்பு சாதம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற சுவையான ஒரு ரெசிபியாகும். இது வெறும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி மட்டும் அல்ல பெரியவர்களும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு ரெசிபி. அரிசி மற்றும் பருப்போடு நெய்யின் மணமும் சுவையும் சேர்ந்து இந்த சாதம் அட்டகாசமாக இருக்கும். இதை செய்வதும் மிக சுலபம். இந்த அரிசி பருப்பு சாதத்தை எப்படி எளிமையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.
அரிசி பருப்பு சாதம் செய்வதற்கு ஒரு கப் அளவு அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதே கப்பில் மூன்றில் ஒரு பங்கு துவரம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் தண்ணீரில் நன்றாக கழுவி 15 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள். இவை நன்றாக ஊற வேண்டும். இப்பொழுது குக்கரில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கால் ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு கொத்து கறிவேப்பிலை, நறுக்கிய மூன்று பச்சை மிளகாய், 4 வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும் இவற்றை தாளித்த பிறகு இதில் தோல் உரித்த ஆறு பல் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பூண்டு வதங்கிய பிறகு 10 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் இதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக வதங்க வேண்டும்.
இப்பொழுது ஊற வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை தண்ணீரை வடித்து இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஒன்னேகால் கப் அரிசி மற்றும் பருப்புக்கு இரண்டிலிருந்து இரண்டரை கப் அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவிடவும். இந்த அரிசி பருப்பு சாதம் நன்கு குலைந்து இருந்தால் தான் நன்றாக இருக்கும். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து விருப்பப்பட்டால் கூடுதலாக நெய் சேர்த்து பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான அரிசி பருப்பு சாதம் தயாராகிவிட்டது.
சுலபமா செய்யலாம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு சூப்பரான கொத்தமல்லி சாதம்!
இதில் பச்சை மிளகாய், வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்திருப்பதால் அதன் காரமே போதுமானது. ஒருவேளை காரம் விரும்புபவர்களுக்கு கூடுதலாக காரம் தேவைப்பட்டால் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம் .