கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கிருஷ்ணருக்கு இந்த இனிப்பு சீடை செய்ய மறந்துடாதீங்க!

கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு பலவிதமான உணவுப் பண்டங்களை படைத்து வழிபடுவது வழக்கம். குறும்புக்காரரான கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்பார் என நாம் கதைகளின் வாயிலாக கேள்விப்பட்டிருப்போம். கிருஷ்ணருக்கு வெண்ணை மட்டும் பிடித்தமான உணவு பொருள் அல்ல. கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவுகள் பல உண்டு அவலை வைத்து செய்யும் உணவு வகைகளும், லட்டுவும், இனிப்பு மற்றும் உப்பு சீடையும் மிகவும் பிடித்தமான உணவுகள் தான். கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளில் ஒன்றான இனிப்பு சீடை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

கிருஷ்ண ஜெயந்திக்கு சட்டென்று செய்யக்கூடிய ஒரு ரெசிபி… கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு அவல்!

இனிப்பு சீடை அல்லது வெல்ல சீடை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இது எந்த விதமான கம்பி பதமும் வர தேவையில்லை. வெல்லம் நன்கு கரைந்து இருந்தால் போதுமானது. வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் இதனை வடிகட்டி அப்படியே வைத்து விடலாம்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவு அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும். இதில் இரண்டு மேசை கரண்டி உளுந்து வறுத்து பொடி செய்து அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எந்தவித கட்டிகளோ குருணைகளோ இல்லாத வகையில் நன்கு சலித்து பயன்படுத்தவும். இப்பொழுது இந்த அரிசி மாவுடன் இரண்டு ஸ்பூன் அளவு வெள்ளை எள்ளு சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் அளவு தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு வெண்ணை இதில் சேர்க்கவும்.

இப்பொழுது இவை அனைத்தையும் நன்கு கைகளால் கலந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் கலந்த பின்பு வடிகட்டி வைத்திருக்கும் வெல்லத்தை இதில் சிறிது சிறிதாக சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும். மாவு தண்ணீராக இருக்கக் கூடாது கெட்டியாக இருக்க வேண்டும். இப்பொழுது இந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

உருண்டைகளை உருட்டும் பொழுது மென்மையாக உருட்ட வேண்டும். அதிக இறுக்கமாக உருட்டக்கூடாது. இறுக்கமாக உருட்டினால் சீடை வெடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே மென்மையாக உருட்டி சிறிது நேரம் வெள்ளை துணியில் வைத்து நிழலில் 20 நிமிடங்கள் வைத்து விடவும். இப்பொழுது கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து உருட்டி வைத்திருக்கும் சீடையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.

சீடை நன்கு சிவக்க வேண்டும் பழுப்பு நிறத்தில் வந்த பின்னர் எடுக்கலாம். சீடை வெடித்து விடுமோ என்ற பயம் பெரும்பாலானோருக்கு இருக்கும். சீடை வெடிக்காமல் இருக்க மாவில் எந்தவிதமான கட்டிகள் அல்லது குருணைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பின்பு முக்கியமாக மாவை மென்மையாக உருட்டி இருக்க வேண்டும். பொரிக்கும் பொழுது அதிக அளவு உருண்டைகளை சேர்த்து பொரிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை சேர்க்கவும். மாவை உருட்டி சில நிமிடங்கள் நிழலில் வைக்கும் பொழுது பல் குத்தும் குச்சியை வைத்து லேசாக குத்தியும் விடலாம் இதனால் சீடை வெடிக்காமல் இருக்கும்.

கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு பிடித்தமான லட்டு இப்படி செய்யுங்கள்! லட்டு செய்வது எப்படி?

அவ்வளவுதான் கிருஷ்ண ஜெயந்திக்கு நெய்வேத்தியம் செய்ய இனிப்பு சீடை தயாராகி விட்டது!