கிருஷ்ண ஜெயந்திக்கு சட்டென்று செய்யக்கூடிய ஒரு ரெசிபி… கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு அவல்!

மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி அன்று கிருஷ்ணர் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி, ஜனமாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல்வேறு பெயர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் மாதத்தில் ஆறாம் தேதி வர இருக்கிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை கிருஷ்ணரை நினைத்து விரதம் இருந்து, பூஜை செய்து கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவு வகைகளை நெய்வேத்தியம் செய்வார்கள். அப்படி கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்றுதான் அவல். இந்த அவலை வைத்து சுவையான அவல் லட்டு, அவல் பாயசம், இனிப்பு அவல் என பலவகை ரெசிபிகளை செய்யலாம். இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு அவலை வைத்து எப்படி சுவையான இனிப்பு அவல் செய்வது என்பதை பார்ப்போம்.

கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு பிடித்தமான லட்டு இப்படி செய்யுங்கள்! லட்டு செய்வது எப்படி?

இந்த இனிப்பு அவலை செய்வது மிக மிக எளிமை. ஐந்தே நிமிடத்தில் செய்துவிடலாம். செய்யும் நேரம் குறைவாக இருந்தாலும் இதன் சுவை மிக அருமையாக இருக்கும். சுவையான இந்த இனிப்பு அவல் செய்வதற்கு ஒரு பேனில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி நெய் உருகியதும் முந்திரிப் பருப்பை சேர்த்து முந்திரிப் பருப்பை நன்கு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது அதே பேனில் முக்கால் கப் அளவு வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீரில் நன்கு வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்த பின்பு இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய இந்த வெல்லப் பாகை ஒரு கப் அவலில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் அரை கப் துருவிய தேங்காய் மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

வாயில் வைத்ததும் கரையும் சூப்பரான நெய் ஒழுகும் மைசூர் பாகு!!

இப்பொழுது இறுதியாக வறுத்த முந்திரியை சேர்த்து கலந்து இதனை அப்படியே வைத்து விடலாம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு நெய்வேத்தியம் செய்ய இனிப்பு அவல் இப்பொழுது தயாராகி விட்டது. இதனை குழந்தைகளுக்கு சிற்றுண்டி ஆகவும் செய்து கொடுக்கலாம்.