பஞ்சு போன்ற மென்மையான அப்பம்… இந்த கார்த்திகை திருநாளுக்கு இப்படி செய்யுங்கள் இனிப்பு அப்பம்!

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கியமான பண்டிகை கார்த்திகை தீபத்திருநாள். இந்த கார்த்திகை திருநாள் அன்று வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி இறைவனை வழிபடும் பொழுது கடவுளுக்கு பிரசாதமாக வீட்டிலேயே சில நெய்வேத்தியங்கள் செய்து படைப்பது உண்டு. அப்படி ஒரு நெய்வேத்தியம் தான் இனிப்பு அப்பம். இந்த இனிப்பு அப்பம் மிருதுவாக பஞ்சுபோன்று எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சுலபமாக செய்யலாம் திருக்கார்த்திகை பிரசாதம் பொரி உருண்டை…!

இனிப்பு அப்பம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பச்சரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பச்சரிசியை மூன்று முறை தண்ணீரில் நன்கு அலசி கொள்ள வேண்டும். தண்ணீரில் அலசிய பிறகு இதனை வேறொரு நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இந்த பச்சரிசி குறைந்தது மூன்று மணி நேரம் ஊற வேண்டும். பிறகு அரை கப் வரும் அளவிற்கு வெல்லத்தை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வெல்லத் துருவலுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும். அடுப்பில் அதிகமான தீயில் வைத்து வெல்லத்தை கரைய விட வேண்டும். வெல்லம் கரைந்ததும் இதனை ஆறவிடலாம். அதிகம் ஆறவிட்டு விடக்கூடாது. மிதமான சூட்டில் இருக்கும் படி ஆறவிடவும்.

இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். தண்ணீர் முழுவதுமாக வடிகட்டிய பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்‌. இதனுடன் ஒரு வாழைப்பழம் மற்றும் இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசியை கொரகொரப்பு இல்லாமல் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை வடிகட்டி இந்த மிக்ஸியில் சேர்க்க வேண்டும்.

கார்த்திகை தீபத்தன்று இப்படி செய்து பாருங்கள் ரவை அப்பம்…!

இப்பொழுது அனைத்தையும் நன்கு அறைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு இதனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம். பிறகு ஒரு ஆழமான கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு செய்ய வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி மாவு மட்டும் எடுத்து வாணலியில் மெல்ல ஊற்றி வேக விட வேண்டும். மாவு நன்கு உப்பி வரும். நன்கு சிவந்து உப்பியதும் மறுபுறம் திருப்பி வேக விட வேண்டும். இப்படி ஒவ்வொரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றி வேகவிட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு எடுத்தால் சூடான சுவையான பஞ்சு போன்ற இனிப்பு அப்பம் தயார்.

Exit mobile version