பொரி உருண்டை ஒரு பிரபலமான சிற்றுண்டி வகையாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்பொழுதும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிற்றுண்டி எனலாம். அனைவருக்குமே பொரி உருண்டை என்றதும் அவர்களது பள்ளி பருவம் தான் ஞாபகம் வரும். பெரும்பாலும் பள்ளி செல்லும் பொழுது வழியில் உள்ள கடைகளில் இந்த பொறி உருண்டையை வாங்கி சுவைத்து மகிழ்ந்திருப்போம். இந்த பொரி உருண்டையை கார்த்திகை தீபத்திருநாள் அன்று பிரசாதமாக செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவார்கள். வாருங்கள் எப்படி இந்த பொரி உருண்டையை சுலபமாக மொறுமொறுப்பு மாறாமல் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
கார்த்திகை தீபத்தன்று இப்படி செய்து பாருங்கள் ரவை அப்பம்…!
பொரி உருண்டை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு வரும்படி வெல்லத்தை தூள் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெல்லத்தை அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும். இப்பொழுது இதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து வெல்லப்பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பாகு கெட்டியான உருண்டை பதம் வரவேண்டும்.
வெல்லப்பாகை சில சொட்டு எடுத்து தண்ணீரில் விட்டு உருட்டி பார்க்கும் பொழுது உருண்டையாக உருட்ட வர வேண்டும். அந்த உருண்டை கெட்டியான கல் போன்ற தன்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பாகு சரியான பதத்தில் உள்ளது. இப்பொழுது எந்த கப்பில் வெல்லம் அளந்தீர்களோ அதே கப்பில் மூன்று கப் அளவிற்கு வரும்படி பொரியை அளந்து எடுத்து அந்த பாகில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் சேர்க்கும் பொரி நல்ல மொறு மொறுப்பான பொறியாக இருக்க வேண்டும். சற்று பதத்துப்போன பொரியை சேர்க்கக்கூடாது. ஒருவேளை பொரி பதத்து இருந்தால் வாணலியில் சிறிது நேரம் வறுத்து அதனை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த பொரியை பாகில் நன்றாக கிளறி கொள்ள வேண்டும். பொரியை பாகில் கிளறிய பிறகு சூடாக இருக்கும் பொழுது இதனை உருண்டையாக பிடித்து விட வேண்டும். ஆறிய பிறகு உருண்டை பிடிக்க வராது கையில் தண்ணீர் அல்லது நெய் தடவி இதனை உருண்டை பிடித்துக் கொள்ளலாம். இதனை காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து 5 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
அவ்வளவுதான் மொறுமொறுப்பான பொரி உருண்டை தயாராகி விட்டது…!