சேமியா எளிதாக சமைக்க கூடிய ஒரு உணவு பொருள் அதேசமயம் சுவையான ரெசிபிகளையும் இந்த சேமியாவை வைத்து நாம் செய்ய முடியும். பெரும்பாலும் காலை உணவிற்கு இட்லி, தோசை என செய்வதற்கு மாவு இல்லை என்றால் பலரும் தேர்வு செய்வது சேமியா தான். காரணம் இதனை வைத்து சுலபமாக அதே சமயம் சுவையாக நாம் காலை உணவு தயார் செய்ய முடியும். அப்படி ஒரு எளிமையான சுவையான ஒரு ரெசிபி தான் சேமியா பிரியாணி. வாருங்கள் காய்கறிகள் மற்றும் முட்டை வைத்து சுவையான இந்த சேமியா பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் சூடானதும் ஒரு கப் அளவு சேமியா சேர்த்து அதனை நன்றாக வறுக்க வேண்டும். சேமியா பொன் நிறமாக வறுபட்டதும் இதனை தனியாக வைத்து விடலாம். ஏற்கனவே வறுத்த சேமியாவாக இருந்தால் இதனை வறுக்க தேவையில்லை. நேரடியாக சேமியா பிரியாணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வறுக்காத சேமியாவை மட்டும் இந்த முறையில் வறுத்துக் கொள்ளுங்கள்.
சேமியாவை இப்படி சமைத்து பாருங்கள்… காலை டிபனுக்கு சூப்பரான லெமன் சேமியா…!
இப்பொழுது அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் உருகியதும் ஒரு பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை, ஒரு கிராம்பு, மற்றும் ஒரு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து அதையும் பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கியதும் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஐந்து பீன்ஸ், ஒரு கேரட், ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கால் கப் அளவு பச்சை பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளை சிறிது நேரம் நன்றாக வதக்கி விட வேண்டும். காய்கறிகள் வதங்கிய பிறகு இதற்கு தேவையான மசாலாக்களை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். விருப்பமான அளவு முந்திரிப் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் வதக்கிய பிறகு இதில் பிரியாணிக்கு தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும்.
ஒரு கப் சேமியாவிற்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து மூடி வைத்துவிடலாம். சேமியா நன்கு வெந்த பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைத்து விடவும். முட்டை ஒரு நிமிடம் வெந்ததும் முட்டையுடன் சேர்த்து பிரியாணியை கிளறி விட வேண்டும்.
எளிமையான ஒரு காலை உணவு… மாவு தீர்ந்து விட்டால் உடனடியாக செய்ய அருமையான சேமியா உப்புமா!
முட்டை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் வெறும் காய்கறிகளை மட்டும் சேர்த்தே செய்யலாம். ஆனால் முட்டை சேர்க்கும் பொழுது இதன் சுவை இன்னும் நன்றாக இருக்கும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் அட்டகாசமான பிரியாணி தயாராகி விட்டது. இதனை வெங்காய ரைத்தாவுடன் பரிமாறினால் அத்தனை சுவையாக இருக்கும்.