வாழைக்காய் வைத்து வாழைக்காய் வறுவல், சிப்ஸ் என பலவகையான ரெசிபிகளை செய்யலாம். ஆனால் ஒரு சிலருக்கு வாழைக்காய் என்பது பிடிக்காத காய். அப்படி வாழைக்காய் பிடிக்காதவர் கூட இந்த வாழைக்காய் சாப்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வாழைக்காய் சாப்ஸ் வித்தியாசமான மற்றும் சுவை நிறைந்த ஒரு ரெசிபி ஆகும். சைவ உணவில் ஏதேனும் வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாழைக்காய் சாப்ஸ் தாராளமாக முயற்சித்து பார்க்கலாம்.
வாழைக்காய் ஜாப்ஸ் செய்வதற்கு இரண்டு வாழைக்காயை நீளவாக்கில் வகிர்ந்து குறுக்கே பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். ஒரு வெங்காயம், இரண்டு தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு மேசை கரண்டி தேங்காய் துருவல், ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஆறு பல் பூண்டு, இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் கசகசா, ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் சீரகம், எட்டு வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் கால் ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்த பிறகு இதனை இறக்கி வடிகட்டி ஆற விடலாம். வாழைக்காய் அதிகம் குழைந்து விடக் கூடாது. வாழைக்காய் குழைந்து விட்டால் நன்றாக இருக்காது. இப்பொழுது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெயை காய வைத்து ஆறிய வாழைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு துண்டு பட்டை, ஒரு பிரியாணி இலை, கால் ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இவற்றை தாளித்த பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கி உப்பு தேவைப்பட்டால் இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் பச்சை வாசனை போகும் வரை குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும். இவை அனைத்தையும் வதக்கிய பிறகு எண்ணெயில் வறுத்து எடுத்த வாழைக்காயை சேர்த்து கிளறவும் உடையாமல் வாழைக்காய் முழுவதும் மசாலா சேர்ந்து வரும் வரை குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து சுருண்டு வரும் பொழுது இறக்கி விடலாம். அவ்வளவுதான் மிக சுவையான வாழைக்காய் சாப்ஸ் தயாராகிவிட்டது. விருப்பப்பட்டால் இதன் மீது கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.