ரவையை வைத்து இப்படி ஒரு ஸ்வீட்டா…! குழந்தைகளுக்கு சுவையான ரங்கூன் புட்டு!

ரங்கூன் தற்போதைய மியான்மரின் முன்னாள் தலைநகரமாகும். பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபம் செய்வதற்காக பர்மாவிற்கு சென்று உள்ளனர். அங்கு அந்த மக்களின் பல உணவு வகைகள் நம் மக்களை கவர்ந்துள்ளது. அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு அருமையான ரெசிபி தான் ரங்கூன் புட்டு. இது ரவையை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான இனிப்பு வகையாகும்.

கல்யாண வீட்டு ரவை கேசரி! சுவை மாறாமல் அதே சுவையில் செய்வது எப்படி?

இந்த ரங்கூன் புட்டு செய்வதற்கு ஒரு டம்ளர் அளவு ரவையை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் இந்த ரவையை லேசாக சூடு வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். ரவையை கருக்கி விடாமல் மிதமான சூட்டில் வறுத்து பிறகு ஆறவிடவும். ரவை ஆறிய பிறகு ஒரு இட்டலி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து இந்த ரவையை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒன்றரை டம்ளர் அளவு பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பாலை காய்ச்சிய பிறகு இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கிளற வேண்டும். ரவை பாலில் நன்கு கலந்ததும் இரண்டு டம்ளர் அளவு சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும்.

ரவையும் சர்க்கரையும் கட்டிகள் ஏதும் இல்லாதவாறு நன்கு கிளறி விட வேண்டும். இவை இரண்டும் சேர்ந்து இறுகி வரும் பொழுது முக்கால் டம்ளர் அளவிற்கு நெய் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக தேங்காய் பூ மூன்று டேபிள் ஸ்பூன் மற்றும் ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து கிளறி இறக்கி விடலாம்.

செட்டிநாட்டு ஸ்பெஷலான இனிப்பு வகை உக்கரா செய்வது எப்படி?

விருப்பப்பட்டால் சிறிதளவு நட்ஸை பொடியாக நறுக்கியோ அல்லது நெய்யில் வறுத்தோ இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் மிக சுவையான ரங்கூன் புட்டு தயார்…! இதனை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம்.