முள்ளங்கி வைத்து இப்படி ஒரு பொரியலா வித்தியாசமாக இப்படி செய்யுங்கள் முள்ளங்கி பொரியல்…!

முள்ளங்கி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது முள்ளங்கி சாம்பார் தான். ஆனால் சிலருக்கு இந்த முள்ளங்கியிலிருந்து வரக்கூடிய ஒரு விதமான மணம் பிடிக்காது எனவே முள்ளங்கி வைத்து செய்யும் எந்த உணவையும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி மணம் ஏதும் வராமல் முள்ளங்கியை வைத்து வித்தியாசமாக இப்படி பொரியல் செய்து பாருங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் எந்த வகையான குழம்புக்கும் இந்த முள்ளங்கி பொரியல் மிக சுவையான காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த முள்ளங்கி பொரியலை செய்வதும் அத்தனை சுலபம். வாருங்கள் முள்ளங்கி பொரியல் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முள்ளங்கி பொரியல் செய்வதற்கு முதலில் கால் கிலோ அளவு முள்ளங்கியை எடுத்து அதனை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கி சேர்த்து வதக்கவும். இப்படி வதக்குவதால் முள்ளங்கியில் இருந்து வீசும் மணம் கொஞ்சம் குறையும். முள்ளங்கி சிறிது நேரம் வதக்கிய பிறகு முள்ளங்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து இதனை வேக விட வேண்டும். முள்ளங்கியை குழைத்து விடாமல் பதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 4 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், 6 பல் பூண்டு, 4 மேசை கரண்டி தேங்காய் பூ, ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை விழுது போலவும் அரைத்து விடக்கூடாது. இப்பொழுது முள்ளங்கியை வேகவைத்து எடுத்த கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன், கடலை பருப்பு அரை ஸ்பூன், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இவற்றைத் தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஏற்கனவே முள்ளங்கி வேகும் பொழுது உப்பு சேர்த்திருக்கிறோம் அதை நினைவில் வைத்து தேவையான அளவில் சேர்த்துக் கொள்ளவும். மசாலா நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் நாம் ஏற்கனவே வேகவைத்து எடுத்த முள்ளங்கி சேர்த்து சில நிமிடங்கள் அனைத்தும் ஒன்று சேரும் விதமாக கிளறி இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி பொரியல் தயாராகி விட்டது.