உணவு கலாச்சாரம் மாறிக் கொண்டே வரும் காலத்தில் பலரும் புதிய வகையான உணவு முறைகளை தினமும் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறார்கள். துரித உணவுகள், மேலைநாட்டு உணவுகள் என பலரும் விரும்பி சாப்பிட்டாலும் நம் பாரம்பரிய உணவின் மீது உள்ள நாட்டம் குறைவதே இல்லை. அப்படி பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு தான் புளியோதரை. புளியோதரை வீட்டில் செய்வதை விட கோவிலில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருப்பதை பலரும் உணர்ந்து இருப்போம். கோவில்களில் பிரசாதமாக வழங்கும் புளியோதரைகளை அனைவரும் விரும்பி ருசித்திருப்போம். அதே சுவையில் புளியோதரையை வீட்டிலேயே நாமும் செய்ய முடியும். எப்படி கோவில் சுவையில் புளியோதரை வீட்டில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
மணம் நிறைந்த தேங்காய் சாதம்.. அட்டகாசமான சுவையில் இப்படி செய்யுங்கள்!
ஒரு வாணலியில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் ஒரு மேஜை கரண்டி நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். இதனை ஒன்று இரண்டாக உடைத்துக் கொள்ளலாம். புளியோதரைக்கு தேவையான பொடி செய்வதற்கு அதே வாணலியில் எண்ணெய் இல்லாமல் நான்கு ஸ்பூன் தனியா, இரண்டு ஸ்பூன் எள்ளு, ஐந்து வர மிளகாய், 3 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஆற விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
நூறு கிராம் அளவு புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு முறை சாறு எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது கடாயில் 100 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். புளியோதரைக்கு நல்லெண்ணெய் தான் நல்ல வாசனை தரும். எண்ணெய் காய்ந்ததும் பத்து வர மிளகாய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, பெருங்காயம் சிறிதளவு, கறிவேப்பிலை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் புளியையும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். குறைவான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு வறுத்து அரைத்து தயார் செய்த பொடியை தூவி விடவும். இப்பொழுது தோல் நீக்கிய நிலக்கடலையை சேர்த்து, ஒரு சிறிய துண்டு வெல்லத்தையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி ஆற விடலாம். இதனை பாட்டிலில் போட்டு மூடி வைத்து தேவையான பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த புளிக்காய்ச்சல் ஒரு மாதம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
புளி சாதத்திற்கு ஒரு ஆழாக்கு பொன்னி பச்சரிசியை எடுத்து அதிகம் குழைய விடாமல் பதமாக வடித்துக் கொள்ள வேண்டும். வடித்த சாதத்தில் மூன்று ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி கிளறி வைக்கவும். எண்ணெய் சேர்ப்பதால் சாதம் குழையாமல் வரும். இப்பொழுது தயார் செய்து பாட்டிலில் வைத்திருக்கும் புளி காய்ச்சலில் தேவையான அளவு போட்டு கிளறி விடவும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்க குழந்தைங்க லஞ்ச் பாக்ஸுக்கு தக்காளி சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
அவ்வளவுதான் சுவை நிறைந்த மணமணக்கும் கோவில் புளியோதரை தயார்!