கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று இறால். இறால் வைத்து செய்யும் ரெசிபிக்கள் சுவை நிறைந்ததாக இருக்கும். இறாலை சுத்தம் செய்வது கடினமாக இருந்தாலும் இறால் வேக எடுத்துக் கொள்ளும் நேரமும் மிகக் குறைவு. எனவே இதை சமைப்பது சுலபமாக இருக்கும். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று மட்டுமே வழக்கமாக சாப்பிடும் பிரியாணி பிரியர்களுக்கு இந்த இறால் வைத்து செய்யும் பிரியாணி வித்தியாசமாகவும் அதே சமயம் சுவை நிறைந்ததாகவும் இருக்கும். வாருங்கள் கமகமக்கும் இந்த இறால் பிரியாணியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
சுவையான சிக்கன் பிரியாணி குழையாமல் பிரஷர் குக்கரில் இப்படி செய்து பாருங்கள்…!
இறால் பிரியாணி செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு இறாலை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கப் அளவு பாஸ்மதி அரிசியை ஊறவைத்து கொள்ள வேண்டும். குறைந்தது இந்த அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டு பெரிய வெங்காயத்தை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் 2 தக்காளியையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு மல்லித்தழை ஆகியவற்றை இடிக்கும் உரலில் இடித்து விழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியிலும் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் நெய் காய்ந்ததும் ஒரு பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை, மூன்று ஏலக்காய், 4 கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இவற்றை தாளித்த பிறகு நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுது நாம் எடுத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு குழைந்து மென்மையாகும் வரை வதக்கி விடவும்.
வாவ் கறி குழம்பின் சுவையை மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமான காளான் குழம்பு!
இவற்றுடன் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு டீ ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கி விடவும். இவை அனைத்தும் சேர்ந்து வதங்கியதும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். இப்பொழுது ஒரு கை நிறைய புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்க வேண்டும். இந்த நிலையில் நாம் ஊறவைத்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். இந்த அரிசிக்கு மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு சரிபார்த்த பிறகு குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வரும் வரை வைக்கவும். ஒரு விசில் வந்த பிறகு விசில் அடங்கியதும் பத்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் கம கமக்கும் இறால் பிரியாணி தயார்.