பொதுவாகவே தயிர் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ், குழம்பு, சாம்பார் என அனைத்து வகையான சாத வகைகளுக்கும் பொருந்தக்கூடிய அருமையான ஒரு சைட் டிஷ் தான் உருளைக்கிழங்கு மசாலா. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சைட் டிஷ் என்று சொல்லலாம். எந்த வகையான சாதம் என்றாலும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மசாலா இருந்தால் போதும் அந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த உருளைக்கிழங்கு மசாலா பலரும் வெவ்வேறு விதமாக செய்வார்கள். நீங்கள் ஒரு முறை இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்து பாருங்கள். இதன் சுவை உங்களை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும். வாருங்கள் உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
சத்தான முருங்கைக்கீரை வைத்து இப்படி குழம்பு செய்து பாருங்கள்… ஆரோக்கியமான முருங்கைக் கீரை குழம்பு!
உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இதில் அரை டீஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை சேர்த்து தாளித்த பிறகு 5 சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை வதக்கும் பொழுதே இதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்படி வதக்கி விட வேண்டும். இதில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து விட வேண்டும் சிறு கொதி வந்ததும் நாம் ஏற்கனவே வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.
உருளைக்கிழங்கை மிதமான தீயில் வைத்து நன்கு வெந்து சுருண்டு வரும் வரை கிளறி விட வேண்டும். உருளைக்கிழங்கில் மசாலா முழுவதும் பட்டு நன்கு சுருண்டு வந்ததும் இறுதியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் எளிமையான சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.