காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் காய்கறிகள் எதுவும் போடாத இந்த பூண்டு வெங்காய கெட்டி குழம்பு முயற்சி செய்து பாருங்கள். இதன் சுவை மிக அருமையாக இருக்கும் பூண்டு, தக்காளி, வெங்காயம் மட்டும் இருந்தால் போதும் அருமையான இந்த குழம்பு செய்து விடலாம். மேலும் பூண்டு உடம்புக்கும் நன்மை தரக்கூடிய ஒரு உணவுப் பொருள். நாம் உண்ணும் உணவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பூண்டு சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. இந்த பூண்டை வைத்து எப்படி இந்த கெட்டி குழம்பு செய்யலாம் என்பதை பார்ப்போம்.
பூண்டு வெங்காயம் கெட்டி குழம்பு செய்வதற்கு 100 கிராம் அளவு பூண்டினை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 150 கிராம் சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். இரண்டு தக்காளிகளையும் நறுக்கிக் கொள்ளவும். புளி மற்றும் உப்பினை ஊற வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது கடாயில் மூன்று மேஜை கரண்டி அளவிற்கு எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சோம்பு பெருங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்கு பொரிந்ததும் நறுக்கி வைத்த பூண்டினை முதலில் போட்டு அதை வதக்கவும். பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பூண்டின் பச்சை வாசனை நீங்கி வெங்காயமும் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். நான்கு தேக்கரண்டி அளவிற்கு குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது ஊற வைத்திருக்கும் உப்பு மற்றும் புளி கரைசலை வடிகட்டி இதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்து குழம்பு கெட்டியானதும் சிறிதளவு வெல்லத்தை இதில் தட்டி சேர்க்கவும். இறுதியாக விருப்பப்பட்டால் சிறிதளவு தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கலாம்.
அவ்வளவுதான் சுவையான பூண்டு வெங்காயம் கெட்டி குழம்பு தயார்!