மாதுளை பழம் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல வகையான சத்துக்கள் நிறைந்த ஒரு பழம் ஆகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யக்கூடிய ஆற்றல் இந்த மாதுளை பழத்திற்கு உண்டு. உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்ய மாதுளம் பழங்களை தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த மாதுளை பழத்தை வைத்து நாம் மாதுளை பழச்சாறு சாப்பிட்டிருப்போம் அல்லது சாலட்களில் பயன்படுத்தி இருப்போம் சிலருக்கு தயிர் சாதத்தில் இதை கொஞ்சமாக சேர்த்தால் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த மாதுளை பழத்தை வைத்து அருமையான பொரியல் செய்யலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? வாருங்கள் இந்த மாதுளை பொரியல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
இந்த மாதுளை பொரியல் செய்வதற்கு ஒரு கப் அளவு மாதுளை முத்துக்கள் வரும் படி மாதுளைகளை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு மேசை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிய விட வேண்டும்.
சுலபமா செய்யலாம் சுவையான வெண்டைக்காய் பொரியல்.. இனி இப்படி செய்து பாருங்கள்…!
உளுந்து மற்றும் கடுகு நன்கு பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் நறுக்கிய மூன்று பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப் அளவு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை. கண்ணாடி பதத்தில் ஓரளவு வெந்து வந்திருந்தால் போதும் வெங்காயம் நன்றாக வெந்ததும் நாம் உதிர்த்து வைத்திருக்கும் மாதுளை முத்துக்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இதனை நீண்ட நேரம் வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை 30 லிருந்து 40 நொடிகள் மட்டும் லேசாக கிளறினால் போதும். இறுதியாக துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன் தூவி கிளறி இறக்கினால் அட்டகாசமான மாதுளை பொரியல் தயார்.
இதில் நாம் மாதுளை முத்துக்களை நீண்ட நேரம் சமைக்கப் போவது இல்லை எனவே இதில் உள்ள சத்துக்கள் வீணாகாது அப்படியே நமக்கு கிடைக்கும். மாதுளையில் பொரியல் செய்தால் நன்றாகவா இருக்கும்? என்று யோசிக்க வேண்டாம் நிச்சயம் இந்த பொரியலின் சுவை அனைவருக்கும் பிடிக்கும். முயற்சி செய்து பாருங்கள்.