பெரும்பாலும் வாரம் ஒரு முறையாவது சிக்கன் எல்லார் வீட்டிலும் கட்டாயம் இடம் பிடித்து விடுகிறது. சிக்கனை கிரேவி, வறுவல், பிரியாணி என்று எப்படி சாப்பிட்டாலும் அசைவப் பிரியர்களுக்கு கட்டாயம் பிடிக்கும். அவர்களுக்கு பிடித்தமான உணவில் சிக்கன் நிச்சயம் இருக்கும் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்த சிக்கனை வைத்து மற்றொரு சுவையான காரசாரமான ரெசிபி தான் பெப்பர் சிக்கன். ஒரு முறை இந்த பெப்பர் சிக்கனை சாப்பிட்டு பாருங்கள் பின்னர் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். இதை செய்வதும் மிக மிக சுலபம்.
அட்டகாசமான பட்டர் சிக்கன்… நீங்கள் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்யலாம்!!
இந்த பெப்பர் சிக்கன் செய்வதற்கு அரை கிலோ அளவு சிக்கனை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். இடிக்கும் உரலில் இரண்டு ஸ்பூன் அளவு மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு இடித்து பொடி தயாரித்து கொள்ளுங்கள். ஒருவேளை கைகளால் இடிப்பது சிரமமாக தோன்றினால் மிக்ஸியிலும் இந்த பொடியை தயாரித்துக் கொள்ளலாம்.
இப்பொழுது அடுப்பில் வாணலி வைத்து அந்த வாணலியில் மூன்று ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அந்த எண்ணையை காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு துண்டு பட்டை, 3 கிராம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மூன்று வர மிளகாய் சேர்த்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் அளவு பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் ஒரு ஸ்பூன் பொடி பொடியாக நறுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
250 கிராம் அளவு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் , 3 பச்சை மிளகாய், அரைத்து வைத்த மிளகு மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறிக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு மற்றும் சுத்தம் செய்து வைத்த சிக்கனையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
அனைத்தையும் நன்கு கிளறிய பின்பு குறைவான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இதனை அப்படியே வேக விட வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு சிக்கன் நிறம் மாறி எண்ணெய் வெளிவந்திருக்கும். அவ்வளவுதான் சுவையான மிளகு சிக்கன் தயாராகிவிட்டது. இதனை இப்பொழுது கறிவேப்பிலை இலையை தூவி இறக்கி விடலாம்.
காரசாரமான இந்த மிளகு சிக்கன் ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!