செட்டிநாட்டு ஸ்டைலில் பருப்பு உருண்டை குழம்பு இப்படி வைத்து பாருங்கள்! ஒரு பருக்கை கூட மிச்சம் இருக்காது…!

பருப்பு உருண்டை குழம்பு தென்னிந்தியாவின் பாரம்பரியமான குழம்பு வகை ஆகும். சைவப் பிரியர்கள் அசைவ பிரியர்கள் என அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு. இந்தக் குழம்பை பலரும் பலவிதமாக செய்வர். பருப்பு மற்றும் முருங்கைக் கீரை சேர்த்து செய்வதால் இது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இதை குழந்தைகளுக்கு கொடுப்பதால் பருப்பில் உள்ள புரதம் மற்றும் முருங்கைக் கீரையில் உள்ள இரும்புச்சத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கும். இப்பொழுது இந்த பருப்பு உருண்டை குழம்பை செட்டிநாட்டு பாணியில் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ஒருமுறை வத்தல் குழம்பு செட்டிநாட்டு முறையில் இப்படி வைத்துப் பாருங்கள்!

பருப்பு உருண்டைக் குழம்பிற்கு முதலில் உருண்டை தயார் செய்வதற்கு ஒரு கப் அளவு துவரம் பருப்பை கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் ஆறு வர மிளகாய், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், தேவையான அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஊற வைத்துள்ள பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒன்று இரண்டாக அரைக்க வேண்டும். பருப்பை அரைத்து எடுத்ததும் இதனுடன் 150 கிராம் சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை மெல்லிசாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு மேசை கரண்டி அளவிற்கு துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்ந்து பிசைந்து கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரைகளை உருவி சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு பிசைந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உருட்டிய உருண்டைகளை இப்பொழுது ஒரு இட்டலி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது குழம்பிற்கு தேவையான உருண்டை தயாராகி விட்டது. குழம்பு தயார் செய்வதற்கு அரை கப் சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, மூன்று தக்காளிப் பழம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் புளியை ஊற வைத்துக் கொள்ளவும். இரண்டு மேஜை கரண்டி தேங்காயை மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயில் நான்கு மேசை கரண்டி எண்ணெய் காய வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, வெந்தயம், பெருங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இவற்றைத் தாளித்த பிறகு நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு குழைந்து மென்மையானதும் மூன்றரை ஸ்பூன் மல்லித்தூள் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட வேண்டும். ஏற்கனவே ஊற வைத்திருக்கும் உப்பு மற்றும் புளி கரைசலை கரைத்து ஊற்றி கொதிக்க விட வேண்டும். இது கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இதனுடன் ஊற்றி கொதிக்க விடவும்.

அட.. என்ன சுவை! பிரியாணியுடன் சாப்பிட அட்டகாசமான எண்ணெய் கத்திரிக்காய்!

குழம்பு கொதிக்கும் பொழுதே வேக வைத்து எடுத்த உருண்டைகளை போடவும். குழம்பு சற்று கெட்டியானவுடன் இறக்கி விடலாம் அவ்வளவுதான் சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்!

Exit mobile version