வத்தல் குழம்பு சூடான சாதத்துடன் அப்பளம் அல்லது வடகம் வைத்து சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். சுண்டக்காய் வற்றல், கத்திரி வற்றல் என பல வகையான வற்றல்களை தனி தனியாக வைத்து குழம்பு வைக்கலாம். அனைத்து வற்றல்களையும் ஒன்றாக பயன்படுத்தியும் சுவையான வத்தல் குழம்பு தயாரிக்க முடியும். செட்டிநாட்டு பகுதியில் வற்றல்களுடன் மொச்சைக்கொட்டையும் சேர்த்து போட்டு செய்யும் இந்த வத்தல் குழம்பு மிக சுவையாக இருக்கும். செட்டிநாட்டு பகுதியில் வித்தியாசமாக செய்யும் இந்த வத்தல் குழம்பு விருந்துகளில் காலை உணவான இட்லி தோசை உடன் கூட பரிமாறுவார்கள். சாதத்துடன் சாப்பிடவும் மிக சுவையாக இருக்கும்.
இந்த வத்தல் குழம்பு செய்ய இரண்டு கையளவு கத்தரி வற்றலையும், ஒரு கையளவு அவரை வற்றலையும் ஒன்றாக போட்டு சூடான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 10 மாங்காய் வற்றலை எடுத்து அதனை தனியாக ஊற வைக்க வேண்டும். அரை கப் வெள்ளை மொச்சையை வறுத்து அதனை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரை கப் துவரம் பருப்பையும் வேகவைத்து கொள்ளவும். 10 பல் பூண்டு தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். இரண்டு கை அளவு சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மூன்று பெரிய தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மூன்று டேபிள் ஸ்பூன் அளவு துருவிய தேங்காயினை ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தையும் தயார் நிலையில் வைத்த பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் மூன்று குழி கரண்டி காய வைத்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சோம்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தோல் உரித்த பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கிய பின்னர் ஊற வைத்திருக்கும் கத்தரி வற்றல் மற்றும் அவரை வற்றலை போட்டு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விட வேண்டும் வற்றல் ஓரளவு வெந்ததும் 5 ஸ்பூன் சாம்பார் பொடி, இரண்டு ஸ்பூன் மல்லி பொடி, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு எலுமிச்சை அளவு புளியினை உப்பு சேர்த்து கரைத்து இதில் சேர்க்க வேண்டும். இப்பொழுது ஊறிய மாங்காய் வற்றலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். வேகவைத்த மொச்சையையும் சேர்த்து சற்று கொதித்ததும், துவரம் பருப்பை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். இறுதியாக அரைத்த தேங்காயை சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக வரும் பொழுது இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் சுவையான செட்டிநாட்டு வத்தல் குழம்பு தயார்!