பலருக்கும் பிடித்த உணவான பிரியாணி வெவ்வேறு விதமான சைட் டிஷ்களுடன் பரிமாறப்படுகிறது. சிலருக்கு பிரியாணியுடன் ரைத்தா வைத்து சாப்பிட பிடிக்கும் சிலருக்கு கிரேவி, சிக்கன் 65 என்று ஒவ்வொருவரின் விருப்பமும் தேர்வும் வெவ்வேறு விதமாக இருக்கும். அதேபோல் பிரியாணிக்கு எண்ணெய் கத்திரிக்காய் வைத்து சாப்பிட பலருக்கு மிகவும் பிடிக்கும். சில ஹோட்டல்களில் எண்ணெய் கத்திரிக்காய் சிக்னேச்சர் உணவாக உள்ளது. இந்த எண்ணெய் கத்திரிக்காய் செய்யும் பொழுது எண்ணெயில் கத்திரிக்காயை தனியாக பொரித்து இதை கிரேவியுடன் சேர்ப்பார்கள். அதனால் இந்த கத்தரிக்காயின் சுவை அற்புதமாக இருக்கும். இப்பொழுது இந்த எண்ணெய் கத்தரிக்காய் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
முதலில் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதனுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் இதனுடன் நான்கு பல் பூண்டு ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஆகிய சேர்த்து வதக்கவும். இறுதியாக தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும் இதனை மூன்று நிமிடங்கள் வரை குறைவான தீயில் வைத்து மூடிவிடலாம்.
தக்காளி, வெங்காயம் ஆகியன நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்திருக்கும் வேலையில் இதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு ஆகியன சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது எட்டு பிஞ்சு கத்திரிக்காய்களை எடுத்து காம்பினை நீக்கி கத்தரிக்காயின் அடிப்புறத்தை மட்டும் லேசாக பிளஸ் வடிவத்தில் நறுக்கிக் கொள்ள வேண்டும். இந்த கத்தரிக்காய்களை ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இவை அனைத்தையும் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காய் நன்கு சுருங்கி வேகும் வரை இதனை வதக்க வேண்டும். வதங்கியதும் இந்த கத்தரிக்காய்களை தனியாக எடுத்து விடலாம்.
இப்பொழுது அதே எண்ணெயில் அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொள்ள வேண்டும். பொரிந்ததும் இரண்டு வர மிளகாய் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பத்து சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையில் சூப்பரான பிரட் அல்வா!
இந்த நிலையில் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இதனை ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் தயார்!