நீர் தோசை மெல்லிசான, மென்மையான தோசை ஆகும். இது வழக்கமான தோசையிலிருந்து வேறுபட்டது. மங்களூர் பகுதிகளில் பிரபலமான காலை உணவாக இருக்கும் இந்த நீர் தோசை சுவை நிறைந்த ஒரு உணவாகும். அனைத்து வகையான குழம்பு மற்றும் சட்னி வகைகளும் இந்த நீர் தோசைக்கு நன்றாக இருக்கும். இந்த நீர் தோசையில் மாவு அரைத்து புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை அரைத்த உடனேயே செய்யலாம். வாருங்கள் நீர் தோசையை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
நீர் தோசை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது இந்த அரிசி நான்கு மணி நேரம் ஊற வேண்டும். அரிசி ஊறிய பிறகு இதில் உள்ள தண்ணீரை வடித்து அரிசியை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது இந்த அரிசியுடன் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும். கால் கப் தண்ணீர் ஊற்றி அரிசி மற்றும் தேங்காயை மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் அவ்வபோது ஊற்றி இதனை அரைத்து எடுக்கவும்.
சுவையான காரசாரமான பூண்டு சட்னி…! இட்லி தோசைக்கு இந்த சட்னி செய்து அசத்துங்கள்!
மாவை அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் மீண்டும் 2 கப் அளவு சேர்த்து இதனை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். நீர் தோசை என்ற பெயருக்கு ஏற்ப இந்த தோசை மாவு சற்று தண்ணீராகத்தான் இருக்க வேண்டும். இதை நன்கு கரைத்த பிறகு தோசை கல்லை காய வைத்து கொள்ள வேண்டும். தோசைக்கல் நல்ல சூடாக இருக்கும் பொழுது நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை சுற்றிலும் ஊற்றி விட வேண்டும். கல் நல்ல சூடாக இருக்கும் பொழுது மாவை ஊற்றினால் தான் ஆங்காங்கே துளையுடன் தோசை நன்றாக வெந்து வரும். ஒரு துளி அளவு எண்ணெய் அல்லது நெய் தேவைப்பட்டால் ஊற்றி கொள்ளலாம். தோசை வெந்ததும் எடுத்து விடலாம். இந்த தோசை வெண்மை நிறத்துடனே தான் இருக்கும் நிறம் மாறாது. அவ்வளவுதான் சுவையான நீர் தோசை தயார் இதை காரமான சட்னி அல்லது கிரேவியுடன் பரிமாறுங்கள்.