கிராமத்து சுவையில் அட்டகாசமான ஆட்டுக்கால் சூப்…! வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!

மட்டனில் உள்ள பல உறுப்புக்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அவற்றை வைத்து நாம் வித்தியாசமாக அதே சமயம் சுவை நிறைந்த பல ரெசிபிகளை செய்யலாம். அதே போல சுவை நிறைந்த ஒரு ரெசிபி தான் ஆட்டுக்கால் சூப். இது சுவை நிறைந்தது மட்டுமல்ல உடலில் உள்ள எலும்புகளை வலுப்பெறச் செய்யக்கூடிய ஒரு ரெசிபியாகும். வாருங்கள் கிராமத்து முறையில் எப்படி அட்டகாசமான ஆட்டுக்கால் சூப் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சட்டுனு செய்யலாம் சத்துக்கள் நிறைந்த ராகி சூப்!

ஆட்டுக்கால் சூப் செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இதனை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை அரைத்த பிறகு ஒரு சிறிய துண்டு இஞ்சி, தோல் உரித்த பூண்டு ஒரு கைப்பிடி அளவு சேர்த்து அதையும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவை ஓரளவு அரைப்பட்டதும் தோல் உரித்த சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாதி தக்காளி பழத்தை சேர்த்து அதையும் அரைக்கவும். மசாலாக்கள் அனைத்தும் நன்றாக அரைபட்டதும் இதனை தனியாக வைத்து விடலாம்.

இப்பொழுது நான்கிலிருந்து ஐந்து ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடையிலேயே வாட்டி வாங்கிய ஆட்டின் கால் என்றால் அதில் உள்ள கருப்பு பகுதிகளை ஒரு கத்திக்கொண்டு நன்றாக சுரண்டி சுத்தம் செய்து விடவும். பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அலசி கொள்ள வேண்டும். சுத்தம் செய்த ஆட்டின் காலை குக்கரில் சேர்த்து இதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுது, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும்.

சூப்பிற்கு தண்ணீர் சேர்க்கும் பொழுது கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது ஒன்றரை லிட்டரில் இருந்து 2 லிட்டர் வரை தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். குக்கரை மூடி போட்டு விசில் வைத்து அடுப்பில் அதிகமான தீயில் வைக்க வேண்டும். ஆட்டின் கால்கள் வேக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் எனவே அதிகமான தீயில் பத்திலிருந்து பன்னிரண்டு விசில் வரும் வரை வைக்கவும். விசில் வந்து அடங்கியதும் குக்கரை திறந்து பார்த்தால் சூப்பு தயாராக இருக்கும். இப்பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம்.

இறுதியாக தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கிராமத்து ஸ்டைலில் ஆட்டுக்கால் சூப் தயாராகி விட்டது.