அட என்ன சுவை! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையான காளான் சூப்…!

காளான் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருளாகும். காளான் வைத்து செய்யும் அனைத்து ரெசிபிகளும் சுவை நிறைந்ததாக இருக்கும். மேலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது. காளான் வைத்து காளான் பிரியாணி, காளான் கிரேவி என பல ரெசிபிகளை செய்யலாம். இப்பொழுது நாம் காளான் வைத்து எப்படி சுவையான காளான் சூப் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி… வெங்காயம் வைத்து ஆனியன் ரிங்ஸ்…!

காளான் சூப் செய்வதற்கு முதலில் ஒரு பத்து காளான்களை எடுத்து தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிதளவு இஞ்சி மற்றும் 3 பூண்டு பற்களை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லியின் தண்டுப் பகுதி சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் முக்கால் டீஸ்பூன் அளவிற்கு கொத்தமல்லி விதைகளை ஒன்று இரண்டாக இடித்து சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்க்க வேண்டும். பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே இஞ்சி பூண்டு இடித்ததை சேர்த்து பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இவை வதங்கிய பிறகு கொத்தமல்லியின் தண்டுப் பகுதியையும் சிறிதளவு கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் அளவிற்கு மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் காளானில் பாதி மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் எண்ணெயில் வதக்கிய பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடங்கள் கொதித்ததும் மீதமுள்ள மஸ்ரூமை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இதனை வடிகட்டி இதன் சூப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும். சூப்பில் காளான் துண்டுகளை மட்டும் போட்டு அதன் மேல் மிளகுத்தூள், சீரகத் தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை தூவி பரிமாறலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையுடன் காளான் சூப் தயாராகி விட்டது.