மோமோஸ் திபெத்திய பகுதிகளில் முக்கிய ரோட்டு கடை உணவாகும் சமீபகாலமாக இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மிகப் பிரபலமான பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. மோமோஸில் காய்கறிகள் வைத்து செய்யும் வெஜ் மோமோஸ், சிக்கன் வைத்து செய்யப்படும் சிக்கன் மோமோஸ் என பல வகையான மோமோஸ்கள் கிடைக்கின்றன.இந்த மோமோசை ஆவியில் வேகவைத்தும் சில இடங்களில் எண்ணெயில் பொரித்தும் செய்யப்படுகிறது.
உணவகங்களில் கிடைக்கும் மொறுமொறு பிரெஞ்சு ப்ரைஸ்.. இனி வீட்டிலேயே செய்யலாம்…!
இப்பொழுது ஆவியில் வேக வைக்கும் முறையில் வெஜ் மோமோஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். வெஜ் மோமோஸ் செய்வதற்கு முதலில் மாவு தயாரிக்க வேண்டும். இந்த மாவு தயாரிக்க முக்கால் கப் அளவிற்கு மைதா மாவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போன்ற பதத்திற்கு பிசைந்த கொள்ளவும். இதனை 25 நிமிடங்கள் மூடி அப்படியே வைத்து விட வேண்டும்.
இப்பொழுது உள்ளே வைக்கக் கூடிய காய்கறிகளை தயார் செய்து கொள்ளலாம். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய நான்கு பல் பூண்டினை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு இஞ்சி துண்டை பொடிப்பொடியாக நறுக்கி அதனையும் இதனோடு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கால் கப் அளவு வெங்காயத்தையும் பொடியாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு அரைக்கப் துருவிய கேரட், அரைக்கப் பொடி பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், கால் கப் அளவு குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு டீஸ்பூன் அளவு சோயா சாஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும். அரை ஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும். அனைத்தையும் நன்கு கிளறியா பின்பு உள்ளே வைப்பதற்கான காய்கறிகள் தயாராகிவிடும்.
இப்பொழுது பிசைந்து வைத்த மாவை பூரி மாவிற்கு உருட்டுவது போல் சிறிய அளவில் உருட்டிக் கொள்ளவும். அனைத்தையும் விரிசல்கள் இல்லாமல் உருட்டிய பிறகு சிறு வட்ட வடிவில் சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுத்துக் கொள்ளவும். இதன் நடுவே தயார் செய்த காய்கறியை ஒரு ஸ்பூன் அளவு வைத்து வட்டமான பகுதிகளை சுற்றி மடிப்புகளாக எடுத்து மடித்து விடலாம். இதனை புடவை மடிப்பு எடுப்பது போல சிறிய அளவில் மடிக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிய அளவு தண்ணீர் வைத்து மடித்து வைத்த மோமோஸ்களை இட்லி தட்டுகளில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். இதனை மோமோ சட்னி அல்லது சாஸுடன் பரிமாறலாம்.
இனி பிஸ்கட் கடைகளில் வாங்க வேண்டாம்.. இது தெரிந்தால் வீட்டிலேயே செய்வீர்கள்!
அவ்வளவுதான் சுவையான மோமோஸ்கள் தயார்!