மீல் மேக்கர் வைத்து அட்டகாசமான மீல்மேக்கர் பிரியாணியை அசைவ பிரியாணி சுவையிலேயே எளிமையாக செய்ய முடியும். மீல்மேக்கர் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் ஒமேகா-3 ,புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இந்த மீல் மேக்கர் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செரிமான அமைப்பை மேம்படுத்த உதவி புரிகிறது. ஹார்மோன் சமநிலையை அதிகரிக்கிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த மீல் மேக்கர் வைத்து சுவையான மீல் மேக்கர் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
உணவகங்களில் கிடைக்கும் சுவையிலேயே பிரியாணியை மிஞ்சும் விதத்தில் குஸ்கா!
மீல் மேக்கர் பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு மீல்மேக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் நன்கு கொதிக்கின்ற நீரை ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். மீல்மேக்கர் வெந்நீரில் ஊறி நன்கு மென்மையாகி விடும். இப்பொழுது இந்த மீல்மேக்கரில் உள்ள தண்ணீரைப் பிழிந்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இந்த மீல் மேக்கரில் அரை கப் அளவு தயிர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா, தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பிசறி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அரை மணி நேரம் ஊற விட வேண்டும். ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அலசி இதையும் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு குக்கரில் ஒரு மேஜை கரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் உருகி எண்ணெய் சூடானதும் இரண்டு பிரியாணி இலை, ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு நட்சத்திர சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 10 முந்திரிப் பருப்பை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன் சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டு பச்சை மிளகாய்களை கீறி அதையும் சேர்த்துக் கொள்ளவும். ஊற வைத்திருக்கும் மீல் மேக்கரை சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய 2 தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினாக்களை சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். அரை கப் அளவு தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியையும் சேர்த்து கிளறி விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும். விசில் அடங்கியதும் திறந்து பார்க்க சுவையான மீல் மேக்கர் பிரியாணி தயாராகி இருக்கும்.