உணவகங்களில் கிடைக்கும் சுவையிலேயே பிரியாணியை மிஞ்சும் விதத்தில் குஸ்கா!

சில உணவகங்களில் கிடைக்கும் குஸ்கா பிரியாணியை போலவே மிக சுவையானதாக இருக்கும். பலருக்கும் பிடித்தமான இந்த உணவை அடிக்கடி கடைகளில் சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் நல்லது. மேலும் வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லாத போது சட்டென்று சுவையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினால் இந்த குஸ்காவை முயற்சிக்கலாம். காரணம் இந்த குஸ்கா செய்ய வேறு காய்கறிகள் தேவையில்லை. வாருங்கள் எப்படி சுவையான குஸ்காவை எளிமையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கோவில் சுவையில் அருமையான எலுமிச்சை சாதம் இந்த நவராத்திரிக்கு பிரசாதமாக செய்து அசத்துங்கள்!

குஸ்கா செய்வதற்கு இரண்டு கப் அளவு பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் முன்னதாக ஊறவைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு குக்கரில் இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு பட்டை, இரண்டு பிரியாணி இலை, மூன்று கிராம்பு, ஒரு நட்சத்திர சோம்பு, 3 ஏலக்காய் ஆகியவை சேர்த்துக் கொள்ளவும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் அளவு சோம்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்கு பொறிந்த பிறகு ஒரு துண்டு இஞ்சி, நான்கு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் இவற்றை தட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி இதனுடன் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறம் ஆனதும் அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து மசாலாக்கள் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது இரண்டு பழுத்த தக்காளிகளை நீளவாக்கில் நறுக்கி அதையும் இதனுடன் சேர்ந்து தக்காளிகள் மென்மையாகும் வரை வதக்கவும்.

இப்பொழுது ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும் இரண்டு கப் பாஸ்மதி அரிசிக்கு மூன்று கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை விடவும். ஒரு விசில் வந்த பிறகு விசில் அடங்கியதும் குக்கரை திறந்து பார்த்தால் சுவையான குஸ்கா தயாராகி இருக்கும். இதனை அரிசி உடையாமல் மெதுவாக கிளறி வெங்காய ரைத்தாவுடன் பரிமாறலாம்.

Exit mobile version